முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தல்: ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்

திங்கட்கிழமை, 9 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.10 - ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் சங்மாவும் போட்டியிடுகிறார்கள். ஜனாதிபதி வேட்பாளர்கள் 2 பேரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். ஓட்டுப்பதிவு 19​ந் தேதி நடைபெறுகிறது. எம்.பி.க்களுக்கான ஓட்டுப்பதிவு டெல்லி பாராளுமன்றத்தில் நடக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த மாநில தலைநகரங்களில் ஓட்டுப் போடுகிறார்கள். எம்.பி.க்களோ, எம்.எல்.ஏ.க்களோ வேறு மாநிலத்தில் ஓட்டுப் போட விரும்பினால் தேர்தல் கமிஷனிடம் 10 நாட்களுக்கு முன்பு விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெறவேண்டும்.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு வாக்குச்சீட்டு முறையில் நடைபெறுகிறது. இதற்கான ஓட்டுச்சீட்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களின் பெயர்களும் தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி இடம் பெற்றிருக்கும்.

ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகள் இதில் இடம் பெறும். தமிழ்நாட்டில் தயாராகும் ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டில் பிரணாப் முகர்ஜி, சங்மா ஆகியோரின் பெயர்கள் ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் அச்சிடப்படும்.

ஓட்டுப் போடுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளுக்கு 2 மொழிகளில் அச்சிடப்பட்டு எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும். சென்னையில் ஓட்டுச் சீட்டு அச்சடிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டுப் பெட்டிகள் டெல்லியில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. ஓட்டுப் போடும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு முன்பு குறியிட்டு வாக்கு சீட்டை ஓட்டு பெட்டியில் போடவேண்டும்.

ஓட்டுப் பதிவு முடிந்த பிறகு ஓட்டுப் பெட்டிகள் சீல் வைத்து டெல்லிக்கு அனுப்பப்படும். சென்னையில் கோட்டை சட்டமன்ற குழுக்கூட்ட அரங்கில்   ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் அதிகாரியாக மாநில தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரும், உதவி தேர்தல் அதிகாரியாக தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்