முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1623 கெளரவ விரிவுரையாளர்கள் உடனடியாக நியமனம்

திங்கட்கிழமை, 9 ஜூலை 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை.10 - உயர்கல்வித்துறையில் 299 புதிய இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் பாடப்பிரிவுகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவும், ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவும் உடனடியாக 1623 கெளரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கை வருமாறு:-

உயர்கல்வி, மனித வளர்ச்சிக்கு ஆதாரமான தூணாகவும், மரபுவழிக் கல்விமுறைக்குச் சிகரமாகவும் விளங்குகிறது. தொழிலாளர் சந்தைக்குத் தேவையான உயர்ந்த திறன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், குடிமைப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் பல தொழில் வல்லுநர்களுக்கு இன்றியமையாத மேம்பட்ட திறன்களையும் உயர்கல்வி வழங்குகிறது.   இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வியை மாணவ, மாணவியர், குறிப்பாக, கிராமப்புற மாணவ, மாணவியர் தொடர்ந்து பயிலும் வண்ணம், சென்ற ஆண்டு 11 பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும்; நடப்பு ஆண்டில் 3 பொறியியல் கல்லூரிகள்,

7 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 11 பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் துவங்க நான் ஆணையிட்டேன்.  கல்லூரிகள் துவக்கினால் மட்டும் போதாது, அங்கு மாணவ, மாணவியர்களின்

பணித் தேவைக்கேற்ப புதிய பாடப் பிரிவுகள் துவக்கப்பட வேண்டியது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, 51 கல்லூரிகளில் 299 புதிய இளநிலை / முதுநிலை / ஆராய்ச்சி

பாடப் பிரிவுகள் துவக்கிடவும் நான் ஆணையிட்டேன்.  மேலும், இதற்கென 2012-13 ஆம் ஆண்டில் 369 உதவி பேராசிரியர் பணியிடங்கள்,

2013-14 ஆம் ஆண்டில்  365 உதவி பேராசிரியர் பணியிடங்கள், 2014-15 ஆம் ஆண்டில் 107 உதவி பேராசிரியர் பணிடங்கள் என 841 உதவி பேராசிரியர் பணியிடங்களை புதியதாக தோற்றுவிக்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.  தற்போது, புதிதாக உருவாக்கப்பட்ட பாடப் பிரிவுகளுக்கான பணியிடங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள காலிப் பணியிடங்கள் என மொத்தம் 1623 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.  இந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்ப சிறிது காலம் ஆகும் என்பதையும், பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது மாணாக்கர்களின் கல்வியைப் பாதிக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு, இந்தப் பணியிடங்களைத் தற்காலிகமாக கெளரவ விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இதன்படி, 1623 கெளரவ விரிவுரையாளர்கள் உடனடியாகத் தெரிவு செய்யப்பட்டு, பணியமர்த்தப்படுவர்.  கெளரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் தொகுப்தியமாக வழங்கப்படும்.  இதன்மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் சிறந்தக் கல்வியைப் பெற வழிவகை ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்