முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்திற்கு விரைவில் காவிரி நீர்: அமைச்சர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.10 - சேலம் மாநகராட்சியின் குடிநீர் தேவையைப்பூர்த்தி செய்யும் விதத்தில் மேட்டூரிலிருந்து சேலத்திற்கு இன்னும் 3 மாதகாலத்தில் காவேரி குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படும் என்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் மாநகர மக்களுக்கு தேவையான முழுமையான குடிநீர் 3 மாதங்களில் வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் இதுவரை 1,09,000 நபர்களுக்கு  விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் தெற்கு மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 2,601 பயனாளிகளுக்கு ரூ.1.34 கோடி மதிப்பிலான விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி தகவல்.

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாதகாப்பட்டி, சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் டவுன் காரைக்கிணறு ஆகிய இடங்களில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி  வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் க.மகரஷணம், தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மேயர் எஸ்.சவுண்டப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் செ.செம்மலை, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜ், ஜி.வெங்கடாசலம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி கலந்து கொண்டு 2601 பயனாளிகளுக்கு ரூ.1.34 கோடி  மதிப்பிலான மின்சாதன பொருட்களை வழங்கி பேசியதாவது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி சேலம் மாவட்டத்தில் 1,15,000 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 1,09,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கின்படி இன்னும் 6,000 பயனாளிகளுக்கு விரைவில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படவுள்ளது. இன்று மட்டும் 2,601 பயனாளிகளுக்கு ரூ.1.34 கோடி மதிப்பிலான மின்சாதன பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதி முழுமைக்கும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் தனிக்குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு மேட்டூரிலிருந்து சேலத்திற்கு காவேரி தண்ணீர் கொண்டு வரும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித்துறை அமைச்சர் இன்னும் ஒரிரு தினங்களில் வருகை தந்து இப்பணியினை விரைவு படுத்திட உள்ளார். எனவே இன்னும் 3 மாத காலத்தில் மாநகர மக்களுக்கு தேவையான சீரான காவேரி குடிநீர் விநியோகம் செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் 11 நபர்களுக்கு நலிந்தோர் உதவித்தொகையாக ரூ.1.10 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக அளவு மகசூலை ஈட்டி நல்ல வருவாய் பெற வேண்டும் என உழவர் பெருவிழா தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. ரூ.15,000 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினி ஏழை, எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் 2,250 பவுன் தாலிக்கு தங்கமும், ரூ.15 கோடி திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என பேசினார்.

இவ்விழாவில் மாநகராட்சி ஆணையர்  எம்.அசோகன், துணை மேயர் எம்.நடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுலவர் மு.பழனிசாமி, வருவாய் கோட்டாட்சியர் எஸ்.பிரசன்ன ராமசாமி, தனித்துணை ஆட்சியர் சிறப்புத் திட்டங்கள் செல்வராஜ், மண்டலக்குழுத்தலைவர்கள் எம்.சண்முகம், மாதேஸ்வரன், ஜெயபிரகாஷ், தியாகராஜன், வட்டாட்சியர் டி.குமரேசன், பிரகாஷ், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்