முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயமாலா - உன்னிகிருஷ்ண பணிக்கர் மீதான வழக்கு ரத்து

சனிக்கிழமை, 14 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

கொச்சி, ஜூலை.14 - சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் புகுந்து சிலையைத் தொட்டதாக கூறிய கன்னட நடிகை ஜெயமாலா மற்றும் அது குறித்து தேவ பிரசன்னம் கூறிய ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர், அவரது உதவியாளர் ரகு ஆகியோர் மீதான வழக்கு ரத்து செய்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் தேவ பிரசன்னம் எனப்படும் சோழி போட்டு கடவுளிடம் குறி கேட்கும் நிகழ்ச்சியை நடத்தினார் பணிக்கர். அப்போது ஐயப்பன் சன்னிதானத்திற்குள் புகுந்து, ஐயப்பனின் சிலையை ஒரு பெண் தொட்டுள்ளார். இதனால் கோவிலில் தீட்டு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதனால் கேரளாவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

பணிக்கர் இப்படிக் கூறிய அடுத்த நாளே ஆமாம் நான்தான் சிலையைத் தொட்டேன் என்று கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார் கன்னட நடிகை ஜெயமாலா. இதுதொடர்பாக அவர் சபரிமலை சன்னிதானத்திற்கு ஒரு பேக்ஸ் அனுப்பினார். அதில் 1987ம் ஆண்டு எனக்கு 27 வயதாக இருந்தபோது நான் சபரிமலைக்குச் சென்றிருந்தேன். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஐயப்பன் சிலை அருகே போய் விழுந்தேன். அப்போது எனது கை சிலையைத் தொட்டு விட்டதாக கூறியிருந்தார் ஜெயமாலா.

இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. எப்படி இளம் பெண்ணாக இருந்த ஜெயமாலா ஐயப்பன் கோவிலுக்குப் போகலாம், சிலையைத் தொடலாம் என்று சிலர் போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து பத்தனம்திட்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஜெயமாலா சபரிமலைக்கே போனதில்லை என்றும் அவர் பொய் சொல்லியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.

அதாவது உன்னிகிருஷ்ண பணிக்கரும், ஜெயமாலாவும் சேர்ந்து இந்த நாடகத்தை நடத்தியுள்ளனர். உன்னிகிருஷ்ண பணிக்கர் தனக்கு செல்வாக்கு கூட வேண்டும் என்பதற்காக ஜெயமாலாவைப் பயன்படுத்தி பொய் சொல்லியிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து பத்தனம்திட்டா கோர்ட்டில், பணிக்கர், ஜெயமாலா, பணிக்கரின் உதவியாளர் ரகு ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மூன்று பேரும் கேரள ஐகோர்ட்டில் மனு செய்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கோர்ட், மூன்று பேர் மீதான புகாருக்கும் போதிய ஆதாரம் இல்லை. இந்த வழக்கும் சட்டத்திற்குட்பட்டதாக இல்லை. எனவே இவர்கள் மூன்று பேர் மீதான வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர்கள் மீது போடப்பட்ட குற்றப்பத்திரிக்கையும் ரத்து செய்யப்படுகிறது என்று கோர்ட் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்