முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் அதிகாரிகளையே ஏமாற்றி பணம் கொடுக்கும் தி.மு.க.வினர்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,ஏப்.2 - தமிழகத்தில் வரும் 13 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி முறைகேடுகளை தடுக்க தேர்தல் கமிஷனால் அமைக்கப்பட்டுள்ள பல கண்காணிப்பு குழுக்களில் ஒன்றான பறக்கும் படையினர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்திய வாகன சோதனைகளில் பல கோடி ரூபாய்களை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் ஆளும் கட்சியினரோ வேட்டி, சேலை, பாத்திரங்கள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.  

பொதுவாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது என்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பே அந்தந்த கட்சித் தொண்டர்கள், தங்களது கட்சி சின்னங்களை வரைவதற்காக சுவர்களில் இடம் பிடிக்க தொடங்கி விடுவர். வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் வேட்பாளர் பெயர் சின்னங்களை சுவர்களில் வரைவதில் இருந்து ஓட்டுக்களை சேகரிப்பது, கட்சி கொடிகளை கட்டுவது, டோர் ஸிலிப் வழங்குவது வரை தீவிரமாக சுறுசுறுப்பாக விடிய விடிய தேர்தல் பணிகளில் ஈடுபடுவர். கிராமங்கள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளும் தீருவிழாக் கோலம் பூண்டிருக்கும். முந்தைய தேர்தலுக்கு நேர்மாறாக நடைபெறவுள்ள தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் அமைந்துள்ளது. இதற்கு காரணம் தேர்தல் கமிஷன்தான். 

இந்த தேர்தலில் தேர்தல் கமிஷனின் தடாலடி அறிவிப்புக்களால் கட்சியினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வாகனங்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் ரோந்து சுற்றி வருவர். இவர்கள் வாகனங்களை சோதனையிட்டு கணக்கில் இல்லாத பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்வது இவர்களது கடமை. பறக்கும் படையினரும் ரோந்து செல்கின்றனர். இதுவரை பல கோடி ரூபாய்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் நேர்மையாக நடக்க இது போன்ற நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதே. 

ஆனால் தி.மு.க., காங்கிரசார், தேர்தல் அலுவலர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு பல்வேறு வழிகளில் பணத்தை கொண்டு சேர்த்து விடுகின்றனர். இவ்வாறு சேர்க்கும் பணத்தை வாக்கு வாரியாக பிரித்து அந்தந்த வார்டு பொறுப்பாளர்களிடம் கொடுக்கின்றனர். பணத்தை பெற்றுக் கொண்ட பொறுப்பாளர்களும் மக்களிடம் பணத்தை கொடுக்க தயாராகின்றனர். தினம் இரவு 8 மணிக்கு மேல் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் வீடுகளுக்குள் பணம் போடப்படுகிறது. 

சில பகுதிகளில் மின்சாரம் தடைபட்ட நேரங்களில் நேரடியாகவே மக்களிடம் பணத்தை கொடுத்து செல்கின்றனர் தி.மு.க.வினர். இந்த விவரம் தெரிந்து அ.தி.மு.க. கூட்டணியினர் போலீசுக்கோ, தேர்தல் அலுவலர்களுக்கோ தகவல் தெரிவிக்கின்றனர். அவர்களும் அங்கு விரைந்து வந்து சோதனையிடுகின்றனர். ஆனால் அதற்குள் தி.மு.க.வினர் பணத்தை பட்டுவாடா செய்து விட்டு சென்று விடுகின்றனர். என்னதான் தேர்தல் ஆணையத்தின் கடுமையான உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றினாலும் வாகனங்களில் செல்லும் பணம், பொருட்களைத்தான் பறிமுதல் செய்ய முடிகிறது. அப்படியிருந்தும் தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரிகளை ஏமாற்றி விட்டு இரவு நேரங்களில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்கின்றனர். வாகன சோதனையில் ஈடுபட்டு பல கோடி ரூபாய்களை கைப்பற்றும் தேர்தல் அலுவலர்கள் தெருவுக்கு 2 பேரை நியமித்து பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். 

மேலும் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு பணப்பட்டுவாடாவை தீவிரப்படுத்த தி.மு.க.வினர் திட்டம் தீட்டியுள்ளனராம். இதையும் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் நிலைக்கும். இல்லையேல் பணநாயகம் வென்று விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்