முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்வி பயத்தில் பேசுகிறார் கருணாநிதி - ஜி.ராமகிருஷ்ணன்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

நெல்லை ஏப்-3  - தோல்வி பயத்தில் கருணாநிதி திசைமாறி பேசுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்த அவர் செய்தியாளர்களுக்களித்த பேட்டியில் கூறியதாவது:  வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் ஆணையம் வாகன சோதனை நடத்தும் நடவடிக்கைகளில் தலையிடமுடியாது என்று ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளதை வரவேற்கிறோம். தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்துகொள்வதை எமர்ஜென்சி நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாக முதல்வரும், துணை முதல்வரும் கூறிவருவது சரியல்ல. எமர்ஜென்சி என்பது ஜனநாயக உரிமையை பறிப்பது. வாக்களிக்க செல்லும் வாக்களார்களுக்கு அவர் விருப்பத்துக்கு மாறாக பணம் கொடுப்பதை தடுப்பது எமர்ஜென்சி ஆகாது. தேர்தலில் தி.மு.க.வினர் திருமங்கலம் பார்முலாவை அமல்படுத்த முயற்சிக்கின்றனர். அந்த முயற்சி இப்போது எடுபடாது. சேலம் கூட்டத்தில் முதல்வர் மத்திய, மாநில அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ்பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பேசுகிறார். தேர்தல் பணிக்காகவே அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தாசில்தார் மற்றும் வருவாய்துறையினரை அழகிரியின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் கூட்டங்களில் மக்கள் பிரச்சனைகளைப்பற்றி பேசாமல் அ.தி.மு.க. வெற்றிபெற்றால் யார் முதல்வர் என்று பேசிவருகிறார். அதற்கு விஜயகாந்த் தகுந்த பதிலளித்துள்ளார். தோல்வி பயத்தால் கருணாநிதி இப்படி திசைமாறி பேசுகிறார். தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கெதிரான அலை வீசுகிறது. எனவே அ.தி.மு.க. தனிப்பெருபான்மையுடன் ஆட்சியமைக்கும். இந்த தருணத்தில் ம.தி.மு.க. எங்கள் அணியிலிருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது. மக்கள் மனதில் ஆட்சி மாற்றம் தேவை என்ற எண்ணம் வந்து விட்ட பிறகு ம.திமு.க. விலகியுள்ளது தேர்தல் முடிவை பாதிக்காது. தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த ம.தி.மு.க. எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்