முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு தணிக்கை சங்கம்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.8 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டப்பணிகளை தணிக்கை செய்ய தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் உருவாக்கவும், அதில் 858 பதவிகளை நியமிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

நம் நாட்டின் உயிர்நாடியாக விளங்குவது கிராமங்கள் என்பதாலும், நாட்டின் முன்னேற்றம், கிராமங்களின் முன்னேற்றத்தில் அடங்கியுள்ளது என்பதாலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார். 

அந்த வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் ஊரகப் பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும்  ஒரு ஆண்டில் 100 நாட்களுக்குக் குறையாமல் வேலை வாய்ப்பினை அளிப்பதாகும். வறுமையை உருவாக்கும் காரணிகளான வறட்சி, காடுகள் அழிப்பு, மண் அரிப்பு போன்றவற்றைத் தடுக்கும் பணிகளை மேற்கொள்ளுவதன் மூலம், இயற்கை ஆதாரங்களின் மேம்பாட்டினை உறுதி செய்து, நிலையான வளர்ச்சியினை மேம்படுத்துவது இத்திட்டத்தின் துணைக் குறிக்கோளாகும்.  

மேலும், இத்திட்டத்தின் மூலம் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல், காடு வளர்ப்பு மற்றும் மரம் நடுதல், குளங்கள் மற்றும் ஏரிகளை தூர்வாரல் போன்ற பல்வேறு கிராம நலப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு  வழங்கப்பட்டு வந்த 119/​ரூபாய் ஊதியத்தை 132/​ரூபாயாக உயர்த்தி வழங்கிட  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெறும் பணிகள், ஊராட்சிகள் மூலம் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றை  தணிக்கை செய்யும் நோக்கில், தமிழ்நாடு  சமூக தணிக்கை சங்கம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்க  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  

இந்த தணிக்கை சங்கத்தில் பணியாற்றுவதற்காக  இயக்குநர் 1, இணை  இயக்குநர் 2, உதவி இயக்குநர் 1, சமூக தணிக்கை நிபுணர் 1, மாநிலக் குழுக் கண்காணிப்பாளர் 4,  உதவி பணியாளர்கள் 4,  மாவட்ட அளவில்,  மாவட்ட வள ஆதார அலுவலர் 44, மாவட்ட உதவி பணியாளர் 31, வட்டார வள ஆதார அலுவலர்  770 என 858 பணியிடங்களை உருவாக்க  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.  

மேலும், ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் கல்வியறிவு பெற்ற தொழிலாளர்கள், ஒரு ஊராட்சிக்கு 5 நபர் வீதம்  62,620 பேரை வருடத்தில் 5 நாட்களில் தணிக்கைப் பணியில் ஈடுபடுத்தவும்  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் தமிழகத்திலுள்ள 12,524 ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் பணியாற்றும் ஊராட்சி உதவியாளர் என்ற பணியிடத்தின்  பெயரை ஊராட்சி  செயலாளர் என பெயர் மாற்றம் செய்து, அவர்களின் பணியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு காலமுறை  ஊதியம் 2500​ற5000 மற்றும் தர ஊதியம் 500 ரூபாயுடன் சிறப்பு படியாக மாதம் 500 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது.

தற்போது, கிராம ஊராட்சி செயலாளர்கள் தங்கள் பணிகளை மேன்மையாக செய்யும் பொருட்டு, பணி நிமித்தமாக அவர்கள் பணிபுரியும் கிராம ஊராட்சிகளிலிருந்து, சம்பந்தப்பட்ட  மாவட்ட ஆட்சித் தலைவர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (தணிக்கை) மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று  வர வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டும், அதற்காக அவர்களுக்குப் பயணப்படி எதுவும் வழங்கப்படுவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டும், ஊராட்சி செயலர்களுக்கு மாதாந்திர நிரந்தரப் பயணப்படியாக 300 ரூபாய் வழங்க  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்திலுள்ள  12,524  ஊராட்சி செயலாளர்கள் பயன் அடைவார்கள்.       

இதேபோன்று தமிழகத்திலுள்ள அனைத்து கிராம குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான குடிநீர் வழங்கும் வகையில் மின்மோட்டாரை இயக்கி மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீரைச் சேமித்து, பின்னர் கிராம குடியிருப்புகளுக்கு பகிர்ந்தளிக்கும் மேல்நிலை ர்த்தேக்கத் தொட்டி இயக்குபவரின் பணியின் தன்மையை கருத்தில் கொண்டு அவர்கள் பயன் அடையும் வகையில், முதன் முறையாக அவர்களுக்கு சிறப்புப் படியாக மாதம் ஒன்றுக்கு 200 ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்