முக்கிய செய்திகள்

ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி அமைவது நாட்டு நலனைக் காக்கும்- முத்துமணி எம்.பி.

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
muthumani

 

கோபி, - 4- கோபியில் கே.ஏ. செங்கோட்டையன் வெற்றி உறுதி என்றும் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைவதே நாட்டின் நலனைக் காக்கும் என்றும் நம்பியூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார். கோபிசெட்டி பாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையனை ஆதரித்து நம்பியூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பியும், அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளருமான எஸ். முத்துமணி பேசியதாவது, தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க.வும் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அடுத்த முதல்வர் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். இதனை அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரகடனம் செய்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணி மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியாகும். 

கருணாநிதி தலைமையில் அமைந்துள்ள தி.மு.க. கூட்டணி, ஒரு குடும்ப ஆட்சியை நிலைநாட்ட உருவான ஸ்பெக்ட்ரம் ஊழல் கூட்டணியாகும். தமிழ்நாட்டில் அரசியல் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஒரு கட்சி ஆட்சியைத்தான் தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். எனவே தமிழ்நாட்டு மக்களின் எண்ணப்படி அ.தி.மு.க. கூட்டணி தலைவர்களின் ஒருமித்த கருத்துப்படி ஜெயலலிதா தலைமையில் தனித்து ஆட்சி அமைப்பதுதான் மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பயனுள்ளதாக அமையும். 

ஆனால் கருணாநிதியோ சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பின்னால் கூட்டணி ஆட்சி குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்கிறார். அதாவது கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதி கொடிகாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வந்து விட்டால் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். குதிரைப் பேரத்தை உருவாக்கும் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் மக்கள் நலனுக்கு கேடு விளைவிக்கும் என்பதை நன்கு அறிவார்கள் தமிழ்நாட்டு மக்கள். எனவே இந்த தேர்தலை பொருத்தமட்டில் கருணாநிதி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி அமோகமாக வெற்றி பெறும் என்பதும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமையும் என்பதும் உறுதி. அரசியல் தன்னம்பிக்கையும், மன உறுதியையும் கொண்டவர் ஜெயலலிதா. அதே வேளையில் அரசியலில் நடிக்கத் தெரியாதவர். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: