முக்கிய செய்திகள்

வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக 3 வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.21 லட்சம் ரொக்கபணம் பறிமுதல்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
dharmapuru

 

தருமபுரி, ஏப்.- 4 - தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.21 லட்சம் ரொக்க பணம் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி தருமபுரி மாவட்டத்தில் சோதனை சாவடிகள் மற்றும் வாகன சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரியும்  மாவட்ட கலெக்டருமான இரா.ஆனந்தகுமார் தமக்கு வந்த தகவலின் பேரில் மாவட்ட போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மூலம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட சோதனைகளில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.21 லட்சம் ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார். 

இதுகுறித்து தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான இரா.ஆனந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் தருமபுரி மாவட்ட காவல் துறையின் சிறப்பு படையினர் திடீரென மேற்கொண்ட சோதனையில் தருமபுரி மதிகோன்பாளையத்தில் மாமதையன் என்பவரது வீட்டிலிருந்து ரூ.11லட்சத்து 21 ஆயிரத்து 100ம் எ.கொல்லஅள்ளியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜனார்த்தனன் என்பவரது வீட்டில் ரூ.8லட்சமும், கடகத்தூரில் ஒருவர் வீட்டில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும் சேர்ந்து 3 வீடுகளில் மொத்தம் 21 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் கைப்பற்றி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த வீடுகளில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும்  சோதனையின் போது இந்த வீடுகளில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர் அட்டைகள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 3 பேரின் மீது தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை முறைகள் அமுலுக்கு வந்ததிலிருந்து தருமபுரி மாவட்டத்தில் இதுவரை விதிமீறல் தொடர்பாக 27 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதகவும், வாகன சோதனையின் மூலம் ரூ.1 கோடியே 24 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் முடியும் வரை வாகன சோதனைகள் தொடரும் எனவும் தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சுதாகர், உதவி கலெக்டர் மரியம் சாதிக் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: