முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். சமாதியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக.16 - எம்.ஜி.ஆர். சமாதியின் நினைவிடத்தின் நுழைவு வாயிலில் இரண்டு தூண்களின் மத்தியில் வெண்கல குதிரை பறப்பது போல் அமைத்தது இரட்டை இலை சின்னத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாமக்கல் மாவட்டம், வென்னந்தூரை சேர்ந்த வக்கீல் ஏ.ஜி.நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அமைந்துள்ள நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் ரூ.3.4 கோடி திட்டத்தின் அடிப்படையில் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது. எம்.ஜி.ஆர். சமாதி நினைவிடத்தில் புதிதாக 15.9 மீட்டர் உயரத்தில் இரண்டு நினைவு தூண்களும், சிறகை கொண்ட இரண்டு குதிரைகள் பறப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். மக்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழ்நாட்டின் மக்கள் அனைவராலும் கட்சி பாகுபாடின்றி ஏற்றுக்கொண்ட தலைவர். அவரது நினைவிடத்தில் அவர் உருவாக்கிய கட்சி சின்னத்தை குறிப்பது தேவையற்றது. இதன் அருகிலேயே அறிஞர் அண்ணா சமாதி உள்ளது. இவரது நினைவிடத்தில் இவரால் உருவாக்கப்பட்ட சின்னமான உதயசூரியன் பொறிக்கப்பட்டபோது எதிர்ப்பு கிளம்பியதால் அந்த சின்னம் நீக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சமாதியில் அவரது கட்சி சின்னம் இரட்டை இலை பொறிக்கப்படுவதால் எதிர்காலத்தில் மாற்றம் ஏற்பட்டால் அறிஞர் அண்ணா நினைவிடத்தில் அவரது கட்சி சின்னத்தை பொறிப்பார்கள். அந்த சூழ்நிலையில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் அரசு பணத்தில் எம்.ஜி.ஆர். சமாதியை சீரமைப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று தனது மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் பானுமதி மற்றும் சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு சிறப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ் ஆஜராகி மனுதாரர் குறிப்பிடுவதுபோல இரட்டை இலை சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் எம்.ஜி.ஆர். சமாதி வாயிலில்அமைக்கப்படவில்லை. வெற்றியின் சின்னமான `வி' (சு) என்ற சொல்லை பிரதிபலிப்பதாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மனுதாரர் தி.மு.க. கட்சியின் உறுப்பினர் ஆவார். கட்சியின் தலைமையில் நற்பெயர் வாங்குவதற்காகத்தான் இந்த மனு தாக்கல் செய்துள்ளார். கட்சியின் தேர்தல் சின்னம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அறிஞர் அண்ணாவின் சமாதியில் உதயசூரியன் சின்னத்தை நீக்கியதாகவும், ஆனால் அதன் பின்பு வந்த ஆட்சியாளர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்ட மின் கம்பங்களின் உச்சியில் உதயசூரியன் பிரதிபலிப்பது போல் உள்ளது என்று குற்றம் சாட்டினார். ஏற்கனவே, இதுபோன்ற ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த வழக்கின் மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது என அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. 

அப்போது நீதிபதிகள் மனுதாரரை நோக்கி நீங்கள் கட்சியை சேர்ந்தவரா என்று கேள்வி எழுப்பினார். மனுதாரர் இல்லை என்று மறுத்ததையடுத்து, நீங்கள் கட்சியை சார்ந்தவர் என்று அரசு தரப்பில் நிரூபித்தால் உங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றார். நீங்கள் கட்சிக்காரர்கள் இல்லை என்று மறுத்தால் பதில் மனு தாக்கல் செய்யுங்கள். இல்லையெனில் இந்த மனுவை வாபஸ் பெறுங்கள் நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதன்பிறகு மனுதாரர் அவர் தொடர்ந்த மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் இன்பதுரை ஆஜரானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்