முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் லீக் 2012 கோப்பையை சிக்சர்ஸ் அணி வென்றது

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஜோகனஸ்பர்க்: அக், - 30 - தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் 2012 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சொந்த மண்ணில் இறுதிப் போட்டியில் சொதப்பிய ஹைவல்டு லயன்ஸ் தோல்வியை தழுவியது.

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிட்னி சிக்சர்ஸ், தென் ஆப்பிரிக்காவை சேர்நத் ஹைவல்டு லயன்ஸ் அணிகள் மோதின. சொந்த மண்ணில் களமிறங்கிய ஹைவல்டு லயன்ஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் போட்டியின் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஹைவல்டு லயன்ஸ் அணியினர் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆனால் சிட்னி சிக்சர்ஸின் அபார பந்துவீச்சில், துவக்கம் முதலே ஹைவல்டு லயன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க திணறினர். மேலும் சொற்ப ரன்களிலேயே அவுட்டாகினர்.

தொடரில் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்த குலாம் போடி 6 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அதன்பிறகு குவான்ட்டம் கார்க்(1), கேப்டன் பீட்டர்சன்(1), மெக்கான்ஸி(0) ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர். சோகைல் தன்வீர் சற்றுநேரம் ஆடி 11 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அதன்பிறகு ஜீன் சைம்ஸ், தாமி சோலிகிலே ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் சரிவை மீட்க முயன்றனர். பவுண்டரிகளும், சிக்ஸ்களும் கிடைத்து அணியின் ஸ்கோர் உயர்ந்து வந்த நிலையில், சோலிகிலே 20 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து வந்த பிரிட்டோரியஸ் வந்த வேகத்தில் 2 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்து உற்சாகப்படுத்தினார். ஆனால் அவரும் 21 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு வந்தவர்கள் வரிசையாக அவுட்டாகினர். ஜீன் சைம்ஸ் மட்டும் போராடி அரைசதம் கடந்து அணிக்கு ஆறுதல் அளித்தார். அவரும் 51 ரன்களில் வெளியேற, அணியின் ஸ்கோர் உயரும் என்ற நம்பிக்கை போனது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஹைவல்டு லயன்ஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 121 ரன்களை எடுத்தது. சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் நாதன் மெக்கலம், ஹேசல்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

122 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டிய சிட்னி சிக்சர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் மைக்கேல் லாம்பும், பிராட் ஹட்டனும் சேர்ந்து அதிரடியாக ஆடினர். பிராட் ஹட்டன் பொறுமையாக ஆட, மைக்கேல் லாம்ப் அதிரடியாக ஆடினார். கடைசி வரை விக்கெட் எதுவும் இழக்காமல் சிட்னி சிக்சர்ஸ் அணி 12.3 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மைக்கேல் லாம்ப் 42 பந்துகளில் 5 சிக்ஸ், 8 பவுண்டரிகள் அடித்து 82 ரன்கள் குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய பிராட் ஹட்டன் 37 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய மைக்கேல் லாம்ப் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

பரிசு தொகை எவ்வளவு?:

சாம்பியன் பட்டம் வென்ற சிட்னி அணிக்கு கோப்பையும், ரூ.13.42 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பிடித்த லயன்ஸ் அணிக்கு ரூ.6.7 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்