முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுவென்டி20 ரேங்கிங்: இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்பு!

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

துபாய்: அக், - 30 - டுவென்டி20 போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் தற்போது 3வது இடத்தில் உள்ள இந்திய அணிக்கு, முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்து, சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) தரவரிசைப்பட்டியலை(ரேங்கிங்) வெளியிடுகிறது. இதில் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றிற்கு முன்னேற முடியாமல் இந்திய அணிக்கு, முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐசிசி டுவென்டி20 போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் டுவென்டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை அணி(127 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ளது. உலக கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள்(121 புள்ளிகள்), 2வது இடத்தில் உள்ளது. தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள இந்திய அணி 120 புள்ளிகளுடன் உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவிற்கு இந்த மாதம் சுற்றுப்பயணம் வர உள்ள இங்கிலாந்து அணி, இங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 2 டுவென்டி20 போட்டிகள், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பங்கேற்க உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் களமிறங்க உள்ள இந்திய அணி 2 டுவென்டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், டுவென்டி20 தரவரிசையில் 127 புள்ளிகளை பெற்று முதலிடத்திற்கு முன்னேற முடியும். ஆனால் ஒரு போட்டியில் மட்டும் இந்தியா வெற்றி பெறும்பட்சத்தில் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா அந்த இடத்திற்கு முன்னேறலாம்.

இந்த நிலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, நாளை டுவென்டி20 போட்டியில் பங்கேற்க உள்ளது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றால், இந்திய அணியின் முதலிடத்திற்கு முன்னேறும் கனவு கலைந்துவிடும். ஆனால் நாளை இலங்கை அணி தோல்வி அடையும்பட்சத்தில் இந்திய அணிக்கு முதலிட வாய்ப்பு நீடிக்கும். நாளைய போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால், இந்த ஆண்டு இறுதி வரை இலங்கை அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும்.

இதே நேரத்தில் இலங்கை, இந்தியா அணிகள் பங்கேற்க உள்ள டுவென்டி20 போட்டிகளில் தோல்வி அடைந்து, வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றால், அது தரவரிசையில் முதலிடத்தை பெறும்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டுவென்டி20 போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 20 மற்றும் 22ம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டி புனேயிலும், 2வது போட்டி மும்பையிலும் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்