முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: பாக்., வீழ்த்தியது இந்தியா

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கவுங்ஸூசீனா, நவ. 2 - மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.  முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 63 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது. 

சீனாவில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுலக்ஷனா நாயக், அனுஜா பாட்டீல் களமிறங்கினர். இந்த ஜோடி சொற்ப ரன்களிலே ஆட்டமிழந்தது. அதனால் 1.3 ஓவர்கள் முடிவில் 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த பூன் ராவத், கவுர் ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 36 ஆக உயர்ந்த போது சிறப்பாக ஆடி வந்த ராவத் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்தார். 

அவரை தொடர்ந்து நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களாக இருந்தது. பின்னர் பேட் செய்த வீராங்கனைகளில் அதிகபட்சமாக மல்கோத்ரா மட்டும் 18 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 20 வது ஓவரின் கடைசி பந்தில் கடைசி விக்கெட்டையும் இழந்து 81 ரன்கள் சேர்த்தது. 

82 ரன்கள் என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியினருக்கு சோதனை காத்திருந்தது. இந்திய வீராங்கனைகளின் கட்டுக்கோப்பான பந்து வீச்சினால் எதிரணியினர் ரன்கள் சேர்க்க சிரமப்பட்டனர். அந்த அணி 4 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இந்திய அணியின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த அணியினர் ஒருவர்பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர். 19.3 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

ஆட்ட நாயகியாக 25 ரன்கள் எடுத்த பூனம் ராவத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகி விருதை பாகிஸ்தான் வீராங்கனை பிஸ்மாஹ் மரூப் தட்டிச் சென்றார். இந்திய அணி குறைவான ரன்கள் எடுத்திருந்த போதும் பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து ஆசிய கோப்பையை கைப்பற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்