முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று சட்டமன்ற தேர்தல் ​- வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.13 - தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.  காலை 8 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.  தேர்தல் களத்தில் 234 தொகுதிகளிலும் 2 ஆயிரத்து 773 வேட்பாளர்கள் உள்ளனர். கடந்த 3 வாரங்களாக நடந்து வந்த பிரச்சாரம் கடந்த 11 ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கத்தில் தமது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி, தமது சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணத்தை சென்னையில் நிறைவுசெய்தார். அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் தீவிர ஒட்டுவேட்டையை நடத்தினர்.  இதேபோல தி.மு.க. தலைவர் கருணாநிதி திருவாரூரில் தமது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமது இறுதி பிரச்சாரத்தை திருவாரூரிலேயே முடித்தார். தி.மு.க.வை ஆதரித்து அதன் தோழமைக் கட்சி தலைவர்களும் தீவிர ஓட்டுவேட்டை நடத்தினர்.  

அ.தி.மு.க. கூட்டணி சார்பாக  கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தாகாரத், டி.ராஜா, ஏ.பி. பரதன் ஆகியோரும், தி.மு.க. கூட்டணி சார்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் ஆகியோரும், பா.ஜ.க. விற்காக அத்வானி, சுஷ்மா சுவராஜ் ஆகிய தேசிய தலைவர்களும்  தமிழகம் வந்து தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி  வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டினார்கள். 

இந்த தேர்தலில் முதன்முறையாக  வாக்காளர்கள் அனைவருக்கும் புகைப்படங்களோடு கூடிய பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல வாக்காளர் ஜாபிதாவிலும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் கள்ள ஓட்டு போடுவது கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.  இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை வாக்காளர்கள் தங்கள்  வாக்குகளை பதிவு செய்யலாம். பொதுமக்கள் சுதந்திரமாக பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளும் தேர்தல் கமிஷன் முழுவீச்சில் செய்து முடித்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 54ஆயிரத்து 314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 13 ஆயிரம் தேர்தல் பார்வையாளர்கள் ரோந்து சுற்றி வந்து ஓட்டுப்பதிவை கண்காணிப்பார்கள். பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாநில போலீசார், 25ஆயிரம் துணை ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய தொகுதிகளில் 4அடுக்கு பாதுகாப்பு இருக்கும். வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்பட்டுவிடாமல் இருக்க திருமண மண்டபங்கள், விடுதிகள், சமூக நல கூடங்கள் ஆகியவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக பல நாட்களுக்கு முன்பாகவே வாகன சோதனைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு பல கோடி ரூபாய்களை கைப்பற்றி உள்ளது. இதேபோல வீடுகளில் பணப் பட்டுவாடா செய்பவர்களையும் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு  உள்ளது. வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டை அல்லது தேர்தல் கமிஷன் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள பூத் சிலிப் ஆகிய இரண்டில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம். 

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 2லட்சத்து 88 ஆயிரம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் நேற்றே தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். இன்று மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடையும். அதன்பிறகு மின்னணு எந்திரங்கள் சீல்வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அடுத்தமாதம் 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்