முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் காவல்துறை முன்னிலையில் பணம் பட்டுவாடா

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஏப்.13 - புதுவையில் காவல்துறை முன்னிலையில் காங்கிரஸ்-தி.மு.க.வினர் மதுபானம், பணம் பட்டுவாடா படுஜோராக நடைபெறுகிறது. இதை கண்டும் காணாமல் புதுச்சேரி தேர்தல் துறை உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் இயங்குகிறதா-இல்லையா? என்று சந்தேகிக்கும் நிலையில் மக்கள் உள்ளனர். 

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாளை(இன்று) நடைபெற  இருக்கும் புதுச்சேரி மாநில பொதுத்தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிக பட்ச இரட்டிப்பு கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து ஆளும் கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது. ஒருதலைப்பட்சமாக அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர். 

காவல்துறையினரிடம் பலமுறை முறையிட்டும், தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. ஆதாரத்துடன் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுவையில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி ஆளும் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்கின்றனர். இதனை அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். புதுவையில் தேர்தல் ஆணையம் இயங்குகிறதா-இல்லையா? என்று சந்தேகிக்கும் நிலை உள்ளது. 

தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உப்பளம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கென்னடி மற்றும் முதலியார்பேட்டையில் கழக வேட்பாளர் பாஸ்கரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் பிரச்சார நேரம் முடிந்த பிறகும் தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பாக என்னையும்(அன்பழகன்), கழக வேட்பாளர் பாஸ்கரை பற்றியும் அவதூறாக, இட்டு கட்டி பேசி துண்டு பிரசுரங்களை வீடுதோறும் கொடுத்து வருகிறார்கள். 

இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. இதனால் சட்டம்-ஒழுங்கு கெடும் சூழல் உள்ளது. நேற்று(11-ந் தேதி) மாலையுடன் பிரச்சாரம் முடிந்த பிறகும் தி.மு.க.வை சேர்ந்த யூ.சி.ஆறுமுகம் தலைமையில் உப்பளம் தொகுதியில் வீடு வீடாக பொய்யான தகவல்களுடன் துண்டு பிரசுரங்களை வினியோகித்து, பணப்பட்டுவாடாவும் செய்துள்ளனர். எங்கள் வீட்டின் எதிரே உள்ள வீட்டில் வினியோகம் செய்தனர். இதை தட்டிக்கேட்ட அ.தி.மு.க. உறுப்பினர் போசை நடுரோட்டில் தி.மு.க. காலிகள் அடித்துள்ளனர். 

இதை கேள்வி பட்ட நான் அங்கு சென்று அ.தி.மு.க. உறுப்பினரை அழைத்து வந்து விட்டேன். இது சம்பந்தமாக தி.மு.க.வை சேர்ந்த யூ.சி. ஆறுமுகம் கொடுத்த பொய்யான புகாரில், முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் எந்த விசாரணையும் செய்யாமல் என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை ஆளும் கட்சிக்கும், அதற்கு ஆதரவு கொடுக்கும் தி.மு.க.விற்கும் ஆதரவாக செயல்பட்டு எதிர்க்கட்சிகள் மீது எந்த வித விசாரணையும் செய்யாமல் பொய் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.

மத்திய அமைச்சர் நாராயணசாமி தோல்வி பயத்தில் மக்களிடம் தொடர்ந்து, மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தால் தான் மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெற முடியும் என்று மிரட்டி வருகிறார். புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி 6 சதவீதம் தான். ஆனால் மற்ற மாநிலங்களில் 9 சதவீதம். மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் அரசு புத்தகம் எல்லாம் இலவசமாக கொடுத்து விட்டோம். பிள்ளை மட்டும்தான் கொடுக்கவில்லை என்று மக்களை இழிவாக பேசியுள்ளார். அவர் மத்திய அமைச்சராக இருக்க அருகதையே இல்லாதவர். 

நாராயணசாமி தேர்தல் முடிந்த பிறகு மக்களை சந்திக்கட்டும். அவர்கள் அவருக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். புதுவையில் பல இடங்களில் தி.மு.க.வும், காங்கிரஸ் வேட்பாளர்களும் ஒரு வீட்டிற்கு ரூ.2000 என பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுபோல ஏம்பலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி ஒரு ஓட்டிற்கு ரூ.1000 தந்து ஓட்டை விலைக்கு வாங்கியுள்ளார். காலாப்பட்டு தொகுதியில் ஷாஜகான் ரூ.1000 தந்துள்ளார். இவர்கள் தான் இப்படி என்றால் காமராஜர் நகர் தொகுதியில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளரும், முதல்வருமான வைத்திலிங்கம் ஒரு ஓட்டிற்கு ரூ.1000 என விலை பேசியுள்ளார். இவர்களோடு ஒப்பிடுகையில் தி.மு.க.வினரும் சளைத்தவர்களில்லை. அவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஒரு ஓட்டுக்கு ரூ.500 தந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் குவார்ட்டர், மதுபானம், பிரியாணி ஆகியவை புதுவையில் தங்கு தடையின்றி கொடுக்கப்பட்டு வருகிறது. 

இங்கு தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லையா? என்றே தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்