முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் விசாரணை தள்ளிவைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, நவ. 25 - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 2 பேர் தங்களை விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் 30 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எஸ். ஜெயக்குமார்(50) தன்னை விடுவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 21.5.91 அன்று ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்துக்கு நான் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி, நான் மற்றும் 15 பேர் கைது செய்யப்பட்டோம். இந்த வழக்கில் 41 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 12 பேர் தற்கொலை செய்து உயிரிழந்தனர், 3 பேர் தலைமறைவாகிவிட்டனர். 26 பேர் மட்டுமே தடா நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை எதிர்கொண்டனர்.

இந்த வழக்கில் 21.9.98 அன்று 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. 11.5.99 அன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்  தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட மறுத்ததோடு, அதை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.

நான் ஜெயிலில் அடைக்கப்பட்டு 19.6.11 தேதியோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறேன்.19.6.05 தேதியுடன் ஜெயிலில் நான் 14 ஆண்டுகளை முடித்திருந்தேன். எனவே வேலூர் ஜெயில் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்து, என்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து 28.12.06 அன்று ஆலோசனைக் குழு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. ஆனால் என்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஆலோசனைக் குழு பரிந்துரை செய்யவில்லை. எனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். ஆலோசனைக் குழு விசாரணையையும், உள்துறை செயலாளரின் உத்தரவையும் ஐகோர்ட் தள்ளுபடி செய்து 24.9.08 அன்று உத்தரவிட்டது. விசாரணையை மீண்டும் நடத்தி முடிவு செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து சிறைத்துறை ஐ. ஜி. 17.2.10 அன்று கடிதம் எழுதி, புதிய ஆலோசனைக் குழு முன்பு ஆவணங்களை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 20.1.10 அன்று விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில், 'கைதியின் வரலாறு, குற்ற நடத்தை, குற்றத்தின் தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்டு, ஜெயக்குமாரை முன்கூட்டியே விடுதலை செய்வதை நாங்கள் பரிந்துரைக்க முடியாது என்று ஆலோசனைக் குழு கூறிவிட்டது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக என்னை ஜெயிலில் அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமாகும். எனது அடிப்படை உரிமையை பாதிக்கும் நடவடிக்கை அது. தமிழ்நாடு சிறைகள் விதிப்படி, ஆயுள் தண்டனை முடிந்து விடுதலை ஆக வேண்டிய தேதியை கணக்கிட வேண்டும். 20 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு நான் விடுதலை செய்யப்படும் தேதியை, விசாரணை காலத்தில் சிறையில் இருந்த நாட்களை கழித்து முடிவு செய்ய வேண்டும். எனது குற்றம், சிறப்புப் பிரிவின் கீழ் வரவில்லை. எனவே 20 ஆண்டுகள் தண்டனை முடிந்ததும், வெளியே வருவதற்கு எனக்கு தகுதி உண்டு. என்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதே போன்று புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதி பி. ராபர்ட் பயஸ் என்ற குமாரலிங்கன் தன்னை விடுவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த 2 மனுக்களும் நீதிபதிகள் சி.நாகப்பன், பி.ஆர்.சிவகுமார் முன்பு விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago