முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து ரயில் பயணிகளுக்கும் அடையாள அட்டை கட்டாயம்

திங்கட்கிழமை, 26 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ. - 26 - ரயிலில் அனைத்து வகுப்பு பயணிகளும் வரும் 1 ம் தேதி முதல் அசல் அடையாள அட்டையை கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயிலில் ஏ.சி. முதல் வகுப்பு, ஏ.சி. 2 ம் வகுப்பு, ஏ.சி. மூன்றாம் வகுப்பு, ஏ.சி. சேர் கார் வகுப்புகளில் பயணம் செய்பவர்கள் அசல் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. 2 ம் வகுப்பு முன் பதிவு பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு அசல் அடையாள அட்டை தேவையில்லை. ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு டிக்கெட்டுகளில் பயணிகள் முறைகேடாக பயணம் செய்வது அதிகரித்துள்ளது என ரயில்வே நிர்வாகத்திற்கு புகார்கள் வந்ததால் வரும் 1 ம் தேதி(டிசம்பர் 1 ம் தேதி) முதல் அனைத்து வகுப்பு பயணிகளும் பயணத்தின் போது அசல் அடையாள அட்டை அவசியம் கொண்டு வர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது டிக்கெட் பரிசோதகரிடம் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கி கிரடிட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய தேசிய வங்கிகளின் அடையாள அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய மாணவர்கள் அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டை, இவைகளில் ஒன்றினை பயணத்தின் போது பயணிகள் கொண்டு வர வேண்டும் என தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது. ரயிலில் பயணம் செய்ய இ டிக்கெட், ஐ டிக்கெட், தத்கால் டிக்கெட் மற்றும் ரயில் டிக்கெட் மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவருக்கும் இக்கட்டுப்பாடு பொருந்தும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்