முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் கூட்டுறவு நூற்பாலையை திறக்க ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.- 27 - ராமநாதபுரம் கூட்டுறவு நூற்பாலையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் 5 நூற்பாலைகள் புனரமைப்புக்கு ரூ.104.41 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலகத்தின் உயர்ந்த தொழில்களில் ஒன்று நெசவுத் தொழில். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு  வகிக்கும்  கைத்தறி நெசவுத் தொழில், பல லட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பை நல்கி வருகிறது.  நெசவுத் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கூட்டுறவு நூற்பாலைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த நூற்பாலைகளின் வளர்ச்சிக்காகவும், இங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காகவும்,  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா   தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   2003 ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் உள்ள ராமநாதபுரம் கூட்டுறவு நூற்பாலைக்கு மீண்டும் புத்துயிர் அளித்து திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டார்.  அதன் அடிப்படையில் நூற்பாலையினை திறப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பழைய இயந்திரங்களை முழுமையாக மாற்றி  புதிய இயந்திரங்களை நிறுவுவதன் மூலம் உற்பத்தித் திறனை முழுமையாக அடைய முடியும் என்பதனைக் கருத்தில் கொண்டு, 18 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு செயல் திட்டம் உருவாக்கப்பட்டது.  இந்த செயல் திட்டத்தினை செயல்படுத்திடவும், இந்த நிதியாண்டில் 9 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், வரும் நிதியாண்டில் மீதமுள்ள 9 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்தும்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   இந்த நூற்பாலை திறப்பதன் மூலம் சுமார் 220 தொழிலாளர்கள் மற்றும் 20 பணியாளர்கள் வேலை வாய்ப்பை பெறுவர். தமிழ்நாட்டில் தற்பொழுது  இயங்கி வரும் 5 கூட்டுறவு நூற்பாலைகள் மிகவும் பழமை வாய்ந்தவை. அதேபோல் அந்த ஆலைகளில் உள்ள இயந்திரங்களும் பழமை வாய்ந்தவையாக உள்ளன. விலையில்லா வேட்டி, சேலை மற்றும் சீருடை திட்டங்களுக்கான நூல் இந்த நூற்பாலைகளிலிருந்து நெசவாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஆலைகளின் இயந்திரங்கள் மிகவும் பழமை வாய்ந்தவையாக உள்ளதால், இந்த ஆலைகளின் உற்பத்தி திறன் நாளுக்கு நாள் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு,  இந்த ஆலைகளின் உற்பத்தித் திறனையும், நூலின் தரத்தையும் அதிகரிக்கும் பொருட்டு இந்த 5 ஆலைகளையும் புனரமைத்து, நவீனமயமாக்க 104.41 கோடி ரூபாய்க்கான ஒரு புனரமைப்பு திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மேலும், இந்த 5 நூற்பாலைகள் அரசுக்கு செலுத்த வேண்டிய கடனான 

52 கோடியே 87 லட்சம் ரூபாயினை 8 ஆண்டுகளுக்கு கடன் தவணை தள்ளி வைத்தும், அரசுக்கு செலுத்த வேண்டிய விற்பனை வரியான 5.32 கோடி ரூபாயினை 8 வருடங்கள் காலம் தாழ்த்தி செலுத்துவதற்கும் அனுமதி வழங்கியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், அரசு கூட்டுறவு நூற்பாலைகளின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட  வழிவகை  ஏற்படும். 

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்