முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் மலர்ந்தது அன்னையின் ஆட்சி மீனாட்சி அம்மன் கையில் செங்கோல் நாளை திருக்கல்யாண வைபோகம்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, ஏப்.15- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. மதுரையில் அன்னையின் ஆட்சி நேற்று மலர்ந்தது. நாளை திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
உலகப் பிரசித்திபெற்றது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில். வெளிநாடுகள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் மீனாட்சி அம்மனை தரிசித்து செல்கிறார்கள். கோவில்களிலேயே 365 நாட்களும் திருவிழா நடைபெறும் ஒரே கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்தான். அதிலும் முக்கியமானது மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா ஆகும். இதில் மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பார்கள். தற்போது மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
நாட்டில் ஆட்சி மாறுவதுபோல மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலிலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆட்சிமாறுவது வழக்கம். ஆவணி மூல திருவிழாவின்போது செங்கோலை கையில் ஏந்தி ஆட்சிப் பொறுப்பேற்கும் சுந்தரேஸ்வரர் சித்திரை திருவிழாவின்போது மீனாட்சி அம்மன் கையில் செங்கோலை கொடுத்து ஆட்சிப் பொறுப்பையும் ஒப்படைக்கிறார். சித்திரைத் திருநாளின் எட்டாம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் மண்டபத்தில் அம்மனும், சுவாமியும் அலங்கரித்துவைக்கப்பட்டனர். இரவு சுமார் 6.05 மணிக்குமேல் 6.29 மணிக்குள் பட்டாபிஷேக நிகழ்வுகள் துவங்கின. அம்மன் அணிந்திருந்த தங்க கிரீடத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. சுந்தரேஸ்வரரிடம் இருந்த வைர செங்கோலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் பெற்றுக்கொண்டு, கோவிலின் பிரஹாரத்தை வலம்வந்து அன்னை மீனாட்சியின் கையில் செங்கோலை ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து அய்யாவிடம் இருந்த ஆட்சி அன்னையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பட்டாபிஷேக நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  இன்று மீனாட்சி-சுந்தரேஸ்வரரின் திக்விஜயம் நடைபெறுகிறது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நாளை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குமேல் 10.50 மணிக்குள் வடக்கு ஆடிவீதியில் நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 16 ஆயிரம் பேருக்கு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவில் சார்பில் திருக்கல்யாண விருந்தும் அளிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்