முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரை விமர்சனம் - நீர்ப்பறவை

புதன்கிழமை, 5 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.5 - சித்தம் பிடித்ததுபோல கையில் ஜெபமாலையை வைத்துக்கொண்டு அடிக்கடி வெளியில் சென்று விடுகிறார் நந்திதாதாஸ். வெளியூர் சென்ற இவரது மகன் தாயை தேடி வருகிறார். அப்போது ஏம்மா இப்படி கடல் பக்கமே போறே, அப்பா இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது என்று கூறுகிறார். அப்பா இறக்கவில்லை, உயிரோடுதான் இருக்கிறார் என்கிறார் நந்திதாதாஸ். 

ஒரு கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் வீட்டுக்குள் இருக்கும் ஒரு இடத்தில் ரகசியமாக ஜெபம் செய்கிறார் நந்திதாதாஸ். அந்த இடத்தை மகன் தோண்டும்போது, உள்ளே நந்திதாதாஸ் கணவரின் எலும்புக்கூடு இருக்கிறது. இதை போலீசுக்கு தெரியப்படுத்தி தன் தாயை ஜெயிலுக்கு அனுப்புகிறார் மகன். ஜெயிலில் போலீஸ் விசாரணையில் பிளாஸ்பேக் காட்சிகளை விவரிக்கிறார் நந்திதாதாஸ். முடிவில் நந்திதாதாஸ்தான் தன் கணவரை கொலை செய்தாரா, இல்லை எப்படி அவர் கொல்லப்பட்டார் என்பது க்ளைமாக்ஸ். 

இளம் வயது நந்திதாதாஸாக சுனைனா, கணவராக நாயகன் விஷ்ணு நடித்திருக்கிறார்கள். மீனவ குப்பத்தில் வாழும் சரண்யா, பூராம் ஆகியோரின் மகன் விஷ்ணு.  சதா குடித்துவிட்டு மது நோயாளியாக அலையும் விஷ்ணு நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் ஜெபம் செய்யும் சர்ச் பெண் சுனைனா (எஸ்தர்) இவரின் பார்வையில் படுகிறார். துரத்தி துரத்தி எஸ்தரை விஷ்ணு (அருளப்பசாமி) காதலிக்கும்போது எஸ்தர் எரிந்து விழும் காட்சிகள் அருமை. 

பின் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு திருந்தும் அருளப்பசாமியை ஊர்மக்கள் ஏற்க மறுக்காதபோது, எஸ்தர் மட்டும் ஏற்றுக்கொண்டு கல்யாணம் செய்துகொள்ள ஒத்துக்கொள்ளும்போது சிறகடித்துப் பறக்கும் விஷ்ணு மனதில் இடம் பிடிக்கிறார். விஷ்ணுவின் நண்பர் பிளாக் பாண்டி, ஜோசப்பாரதியாக வரும் தம்பிராமையா, வடிவக்கரசி, பாதிரியார் அழகம்பெருமாள், யோகி தேவராஜ், அருள்தாஸ் ஆகியோர் தங்களது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பூராம் நடிப்புக்கு விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சரண்யா பொன்வண்ணன் விமர்சிக்க இடமில்லை.மீன் பிடி படகு செய்யும் இஸ்லாம் இனத்தை சேர்ந்த சமுத்திரகனி மீனவர்கள் நிலைமை குறித்து கடலில் தெப்பம் கட்டி எல்லைக்கோடுன்னு போடறீங்க. அது அலை காத்து அடிக்கும்போது தூரமா ஒதுங்கிடுது. உடனே எல்லை தாண்டி வந்துட்டான்னு சுட்டுத் தள்ளறது என்ன நியாயம்? பாகிஸ்தான் காரன் நமக்கு எதிரி நாடாக இருந்தாலும் யாரையும் சுடல, சீனாக்காரன் சுடல, இப்படி மீனவர்கள் சுட்டுக்கொல்லும் சம்பவம் பற்றி பேசும் வசனம் நெஞ்சை புடைக்க வைக்கிறது. இதனால் படம் முழுக்க மனதில் நிற்கிறார் சமுத்திரகனி. படத்துக்கு மிகப்பெரிய பலம் நந்திதாதாஸ். க்ளைமாக்ஸில் அவர் பேசும் வசனங்கள் படம் பார்ப்பவரை மீண்டும் பார்க்க தூண்டுகிறது. 

வைரமுத்துவின் பாடல்கள் அனைத்தும் கதையை ஒட்டி வருகிறது. குறிப்பாக பற, பற பறவை ஒன்று பாடலை கண்மை கறைய பாடியிருக்கிறார் பாடகி சின்மயி. இசை ரகுநந்தன் சூப்பர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் பலவேறு விதமாக கடல்கள் பளிச்சிடுகிறது. இது கதைக்கு மிகப்பெரிய தூண். எழுத்து இயக்கம் சீனுராமசாமி. தென்மேற்கு பருவக்காற்றுக்கு பிறகு உப்புக் காற்றையும் சுவாசிக்க வைத்திருக்கிறார். தயாரிப்பு ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின். இணை தயாரிப்பு எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜுன்துரை. உள்ளங்களை கொத்திச்சென்று உயர பறக்கிறது நீர்பறவை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்