முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம்

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, டிச. 7 -  டெல்டா மாவட்டங்களில்  இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து இன்று (7-ந்தேதி) பந்த் நடைபெறுகிறது. 

இந்த பந்த் போராட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் பாண்டியன், செயலாளர் பக்கிரிசுவாமி, நகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் நடத்தும் பந்திற்கு முழு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. 

மேலும் வருகிற 11 - ந் தேதி காலை 10 மணிக்கு தஞ்சை கீழவாசல் ஆட்டு மந்தை தெருவில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கும், பேரணியாக சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க இருப்பதால் தஞ்சை தெற்கு மாவட்ட வணிகர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.  கூட்டத்தில் துணை தலைவர்கள் பால்ராஜ், தாமரைச் செல்வன், துணை செயலாளர்கள் குப்புசாமி பாபு, தொகுதி செயலாளர்கள் செந்தில் குமார், தண்டபாணி, துணை செயலாளர் மதியழகன், வல்லம் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மாவட்ட பொருளாளர் சேகர் நன்றி கூறினார். நாளை நடைபெறும் பந்திற்கு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் நெல் மற்றும் அரிசி வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. 

இது தொடர்பாக சங்க கூட்டமைப்பு தலைவர் அழகப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

இன்று நடைபெறும் பந்த் போராட்டத்திற்கு எங்கள் முழு ஆதரவை தெரிவித்து கொள்கிறோம். இந்த போராட்டத்தில் தஞ்சை,திருவாரூர், நாகை மாவட்டங்களின் தாலுகா, நகரங்களில் உள்ள அனைத்து நெல், அரிசி வியாபார நிறுவனங்கள் அனைத்தும் கலந்து கொள்ளும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்