முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த மாதத்திற்குள் நியமனம்

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.7 -​ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு இறுதிப்பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட 18 ஆயிரத்து 382 பேரின் பெயர்கள் விவரங்களும் டி.ஆர்.பி.யின் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது பதிவு எண்களை பதிவு செய்து இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளோமா என்பதை அறிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியபோது, முதல் தாள்களில் 449 பேரும், இரண்டாவது தாளில் 84 பேரும் பங்கேற்கவில்லை. இறுதி பட்டியலில் இடம் பெறாத இவர்களுக்கு டி.ஆர்.பி. மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.ஆப்சென்ட் ஆனவர்கள் உரிய காரணத்தை குறிப்பிட்டு வருகிற 10-ந் தேதி டி.ஆர்.பி. அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான நபர்களை இறுதி பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஒரு சில நாட்களில் டி.ஆர்.பி. பள்ளிக்கல்வி, மற்றும் தொடக்ககல்வி இயக்குனரிடம் ஒப்படைக்கிறது. பள்ளித்துறைக்கு தனியாகவும், தொடக்க கல்வி இயக்கத்துக்கு தனியாகவும் ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறது. அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் எவ்வாறு வழங்குது என்று கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.தேர்வு செய்யப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து கலந்தாய்வு நடத்தி பணி நியமனம் வழங்குவது சிரமமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் அவ்வாறு கவுன்சிலிங் நடத்தினால் அதிக நாட்களாகும் என்பதால் ஆன்​லைன் மூலம் கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணையை வழங்கலாம் என்று தெரிகிறது.

தேர்வு செய்யப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு வரவழைத்து காலி இடங்களை வெளிப்படையாக காட்டி விரும்பிய இடங்களை ஆசிரியர்களே தேர்வு செய்து ஆணை வழங்கலாம் என கல்வித்துறை பரிசீலனை செய்கிறது. ஆன்​லைன் மூலமாக கவுன்சிலிங் நடத்தப்பட்டால் ஆசிரியர்கள் சென்னைக்கு வரத்தேவையில்லை. பணி நியமனமும் எளிதாகவும், விரைவாகவும் முடிந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே ஆன்​லைன் மூலம் கலந்தாய்வு நடத்தி பணி நியமனம் வழங்க வசதியாக தேர்வானவர்களின் பட்டியலை இணையதளத்தில் பதிவு செய்து தரும்படி பள்ளிக் கல்வித்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று கல்வித் துறை வட்டரம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்