முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை சிறுதொழில் துறையினருக்கு புதிய சலுகைகள்

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.8 - கோவை மாவட்டத்தில் கடன் பெற்று மின்னாக்கிகள் வாங்கும்  சிறுதொழில் முனைவோருக்கு பங்குத் தொகை 10 விழுக்காடாக குறைக்கப்படும் என்றும், அவர்கள் பயன்படுத்தும் எரிஉலை எண்ணெய்க்கு  மதிப்பு கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் கோவை சிறுதொழில் துறையினர் நேற்று சந்தித்து, சிறு தொழில்துறை சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விளக்கினர். 

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், தென்னிந்திய ஆலைகள் சங்கம், தமிழ்நாடு காகிதம் மற்றும் அட்டை ஆலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் நேற்று (7.12.2012) தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்து தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தார்கள்.  

இந்தச் சந்திப்பின் போது, தொழில் துறை அமைச்சர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர், நிதித் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்தச் சந்திப்பின் போது, மின்னாக்கிகளின் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்கவும், மாநில நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று மின்னாக்கிகளை தொழில் முனைவோர்கள் வாங்கும் போது அவர்கள் அளிக்க வேண்டிய பங்குத் தொகையை குறைக்கவும், தொழிற்சாலைகளில் மின்னாக்கிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு எரிபொருளாக தேவைப்படும் எரி உலை எண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு மதிப்புக் கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கவும் கேட்டுக் கொண்டனர். 

இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, கீழ்க்காணும் சலுகைகளை உடனடியாக இதன்படி உத்தரவிட்டுள்ளார்.  இதன்படி, மின்னாக்கிகளின் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள 14.5. விழுக்காடு மதிப்புக் கூட்டு வரி, 5 விழுக்காடாக குறைக்கப்படும். 

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற்று மின்னாக்கிகள் வாங்கும் தொழில் முனைவோர்கள் தற்போது செலுத்த வேண்டிய 20 விழுக்காடு பங்குத் தொகை 10 விழுக்காடாக குறைக்கப்படும். 

தொழிற்சாலைகளால் மின்னாக்கிகளில் பயன்படுத்தப்படும் எரிஉலை எண்ணெய்க்கு 1.2.2012 முதல் 30.9.2012 வரை மதிப்புக் கூட்டு வரியிலிருந்து ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வரிவிலக்கு 1.10.2012 முதல் முன்தேதியிட்டு 31.5.2013 வரை தொடர்ந்து அளிக்கப்படும்.  இதனால் அரசுக்கு 97 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். 

முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், தொழில் முனைவோர்கள் மின்னாக்கிகள் மூலம் கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதன் மூலம் கூடுதல் உற்பத்தி மற்றும் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு ஏற்பட வழிவகை ஏற்படும். 

இவ்வாறு  முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்