முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது பிறந்தநாளை பெற்றோரை வணங்கும் நாளாக கொண்டாடுங்கள்

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.- 13 - எனது பிறந்தநாளை ரசிகர்கள் பெற்றோரை வணங்கும் நாளாக கொண்டாட வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறினார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் ரஜினிகாந்த். இவர் சினிமாவுக்கு வந்து 36 ஆண்டுகள் கடந்து விட்டது. இவருடைய 63 வது பிறந்த நாளான நேற்று ரசிகர்கள் தமிழகமெங்கும் விமர்சையாக கொண்டாடினார்கள்.  நேற்று காலை கமலா திரையரங்கில் பயபுள்ள படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் படத்தின் ட்ரைலரை கே.பாலசந்தர் வெளியிட்டார். 63 கிலோ எடையுள்ள கேக் தயாரிக்கப்பட்டிருந்தது. ரஜினி பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்களுடன் அந்த கேக்கை வெட்டி கொண்டாடினார் கே.பாலசந்தர். உடன் இயக்குநர்கள் சீனுராமசாமி, பாலாஜி, தண்டபாணி என பலரும் கலந்து கொண்டனர்.  அதேபோல சென்னை தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நேற்று காலை சென்னையில் உள்ள ஆலயங்களில் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது. இன்று ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி. மைதானத்தில் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் சார்பாக ரத்ததான முகாம் நடக்கிறது. இதில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், கருணாஷ், நடிகை நமீதா, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, கே.ராஜன் என பலரும் கலந்து கொள்கிறார்கள். இதேபோல சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள வர்த்த மகாலில் நேற்று மாலை 6 மணிக்கு லதா ரஜினிகாந்த் தலைமையில் ரஜினி பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.  இந்நிலையில் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- எனது பிறந்த நாளை நீங்கள் உங்கள் பெற்றோரை பூஜிக்கும் நாளாக கொண்டாடுங்கள். என் மீது வைத்திருக்கும் உங்கள் அன்புக்கு என்றும் நன்றிக் கடன் பட்டவனாக இருக்கிறேன். இதை அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன். கோச்சடையான் திரைப்படம் நவீன தொழில் நுட்பத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற்றால் ராமாயணம், மகாபாரதம் கதைகள் 3டி-யில் உருவாகலாம். அப்படி வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.  தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்திருக்கிறது. புது இயக்குநர்கள் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துக்கள். இவ்வாறு ரஜினி கூறினார்.  ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னட பட இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் என ஏராளமானோர் வாழ்த்துக் கூறினார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!