முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவால்களை சந்திக்க இந்தியா தயார்: ஜனாதிபதி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

கோவை, டிச.19 -  தேச நலனுக்கு இடையூறு ஏற்பட்டால், எந்தவித சவால்களையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார். இந்திய விமானப்படை பிரிவுகளான குவாட்ரன்- 25, குவாட்ரன்- 33 ஆகிய படைப்பிரிவுகள் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த இரண்டு விமானப்படை பிரிவுகளும் 1965ல் நடந்த சீனாவுக்கு எதிரான போர் மற்றும் 1971ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் போர், கார்கில் போர் ஆகியவற்றில் மகத்தான சேவை புரிந்தன. அதை பாராட்டி இரண்டுபடை பிரிவுகளுக்கும் ஜனாதிபதியின் தர நிர்ணய விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் இரவு 7.20 மணிக்கு கோவை வந்தார். அவரை கவர்னர் ரோசய்யா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம், மேயர் செ.ம.வேலுசாமி, விமானப்படை நிர்வாகவியல் கல்லூரி கமாண்டர் மேனன், ஐ.என்.எஸ்.அக்ரானி கமாண்டர் அமர்சிங் பகன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு கோவை ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். 

நேற்று காலை நடந்த சூலூர் விமானப்படை விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக 9.30 மணியளவில் கோவை விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு 10மணிக்கு விழா மேடைக்கு வந்தார். அங்கு விமானப்படை பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது விமானப்படை பிரிவைச் சேர்ந்த 3ஹெலிகாப்டர்கள் இந்திய தேசிய கொடி, விமானப்படை கொடி ஏந்திய வண்ணம் வானில் பறந்து சென்றது.

இதைத்தொடர்ந்து இந்திய விமானப்படையில் சாதனை புரிந்து குவாட்ரன்25, குவாட்ரன்33 ஆகிய 2விமானப்படை பிரிவுகளுக்கு தனித்தனியே விருதுகள் வழங்கி ஜனாதிபதி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது- இந்தியாவின் பாரம்பரியமிக்க ராணுவத்தில் இந்திய விமானப்படையின் பங்கு மகத்தானது. சுயநலம் இல்லாது இந்த நாட்டின் பாதுகாப்புக்காக விமானப்படை சிறப்பாக பணியாற்றி வருகிறது. 80 ஆண்டுகள் சரித்திரத்தில் பல்வேறு நெருக்கடியான காலத்தில் நாட்டின் இறையாண்மையை பாதுகாத்ததோடு முன்னேற்றத்திற்காகவும், பெறும்பங்காற்றி வருகிறது. போர்க்காலங்களில் மட்டுமில்லாமல் இயற்கை சீற்றங்களின் போதும் பாதுகாக்கும் பணியை இந்திய விமானப்படை செய்து வருகிறது. உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் நமது விமானப்படை பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் 2005ம் ஆண்டு ஏற்பட்ட புயலின் போதும், 2008ம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தின் போதும், இந்திய விமானப்படை தனது பங்களிப்பை பெரிதும் ஆற்றியுள்ளது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது அமைதியை விரும்புவது தான். இதில் நமது விமானப்படை உறுதியோடு தனது அர்ப்பணிப்பை செய்து வருகிறது. தற்போது உயர்ந்த விருதான தர விருது பெற்றுள்ள 25, 33வது படைபிரிவினர் 1965-1971ல் நடந்த போரின் போது மிகப்பெரிய சேவையை செய்துள்ளனர்.

தற்போது படைப்பிரிவு தொடங்கப்பட்டு 50ஆண்டுகள் நிறைவு செய்துள்ள மகத்தான பணிக்கு இந்த நேரத்தில் நாம் நன்றி செலுத்துகிறோம். இந்தியா அமைதியைத்தான் விரும்புகிறது. அதே நேரத்தில் தேச நலனுக்கு இடையூறு ஏற்பட்டால் அதை சந்திக்கவும் தயாராக உள்ளோம். ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு குழுவில் நமது நாடு இடம் பெற்றியிருப்பது நமது திறமைக்கு கிடைத்த சான்றாகும். இந்திய விமானப்படை பல்வேறு சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன். 

இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

இதைத் தொடர்ந்து விமானப்படை வீரர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. 

நிகழ்ச்சியில் கவர்னர் ரோசய்யா, விமானப்படை தலைமை தளபதி பிரவுன், தளபதி சந்தோஷ், 33வது படைப்பிரிவு தளபதி தேவிபால், 25வது படை பிரிவு தளபதி யாதவ், தென்பிராந்திய தளபதி ஜாலி, தென் மேற்கு பிராந்திய தளபதி கோகாய், மேயர் செ.ம.வேலுசாமி மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா முடிந்ததும் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி விமானப்படை விமானத்தில் 12.30 மணியளவில் டெல்லி புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்