முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பணக்கார அரசியல்வாதி ஜெகன்மோகன் ரெட்டி

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

ஐதராபாத்,ஏப்.17 - ஆந்திர மாநிலம் முதல் மந்திரியாக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அவரது மறைவுக்கு பின் ஜெகன்மோகன் ரெட்டி தீவிர அரசியலில் குதித்தார். கடப்பா தொகுதி எம்.பி.யாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசுக்கு எதிர்ப்பாக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஜெகன்மோகன் ரெட்டி எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு புதுக் கட்சியை தொடங்கினார். கடப்பா தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் ஜெகன்மோகன் மீண்டும் போட்டியிடுகிறார். 

நேற்று முன்தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதில் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு ரூ. 500 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே பெரிய பணக்கார அரசியல்வாதியாக திகழ்கிறார் ஜெகன்மோகன். தனது பெயரில் ரூ. 365 கோடியும், தனது மனைவி பெயரில் ரூ. 41 கோடியும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதில் பங்குகள், முதலீடுகள், பத்திரங்கள் ஆகியவை அடங்கும். 

இவரிடம் ரொக்கமாக ரூ. ஐந்தரை கோடியும், தேசிய சேமிப்பு பத்திரம், தபால் நிலைய சேமிப்பு, இன்சூரன்ஸ் பாலிசிகள் ஆகியவை ரூ. 7.08 லட்சமும், நகைகள் மற்றும் இதர சொத்துக்கள் ரூ. 20.56 லட்சமும் உள்ளது. மனைவியிடம் ரொக்கம் மற்றும் பங்கு பத்திரங்கள் ரூ. 36 கோடியும், வங்கியில் இருப்பு ரூ. 56.5 லட்சமும், தங்க, வைர நகைகள் ரூ. 3.8 கோடிக்கும் உள்ளது. இவருக்கும் சேர்த்து சுமார் ரூ. 500 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் ஜெகன்மோகன் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் தனக்கும், தன் மனைவிக்கும் எந்த வாகனமும், விமானமோ, கப்பலோ இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். ஆந்திராவில் தற்போது மிகப் பெரிய பணக்கார அரசியல்வாதிகளாக காங்கிரசை சேர்ந்த லகடபதி ராஜகோபால், தெலுங்குதேசத்தை சேர்ந்த நமணா கேஸ்வரராவ் ஆகியோர் உள்ளனர். ஜெகன் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் இவர்கள் இருவரையும் விட மிகப் பெரிய பணக்கார அரசியல்வாதியாகி விடுவார். ஜெகன்மோகன் ரெட்டி 2004 ல் கடப்பா தொகுதியில் போட்டியிட்ட போது ரூ. 1.77 கோடியும், அடுத்து 2009 ல் ரூ. 7.39 கோடியும் சொத்து இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.  தற்போது ரூ. 500 கோடி சொத்து இருப்பதாக ஜெகன்மோகன் தெரிவித்திருப்பதால் இடையில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று ஆந்திர அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி பிரச்சாரம் செய்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!