முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட முதல்வர் கடிதம்

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.21 - காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காவிரி கண்காணிப்புக் குழுவைக் கூட்ட உத்தரவிட்டனர். அதன்படி டெல்லியில் கூடிய காவிரி கண்காணிப்புக்குழு தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கு 12 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. மேலும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு இம்மாத இறுதிக்குள் அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தமிழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 14.06.2011-ல் தங்களிடம் நான் ஒரு மகஜர் அளித்தேன். அதன்பிறகு 17.10.2011-ல் ஒரு கடிதம் எழுதியதையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்த கடிதத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட உத்தரவிடுமாறு நான் கேட்டுக்கொண்டிருதேன். மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கவும் நான் கோரியிருந்தேன்.

இதனிடையே கடந்த 05.12.2012-ல் சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு இன்னும் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை என்பதை கர்நாடகம் உட்பட அனைத்து மாநிலங்களும் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு வந்தன. இதைக் கேட்ட நீதிபதிகள் நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு எப்போது அரசிதழில் வெளியிடப்படும் என்பதை மத்திய அரசிடம் கேட்டு கோர்ட்டுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் காவிரி கண்காணிப்புக்குழுவும் கடந்த 07.12.2012 அன்று கூடியது. இந்த கூட்டத்தில் நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று இக்கூட்டத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது. அவ்வாறு வெளியிடப்பட்டவுடன் காவிரி கண்காணிப்புக்குழுவும் காவிரி நீர் ஆணையமும் முடிவுக்கு வந்துவிடும். புதிய அமைப்புகளான காவிரி மேலாண்மைக்குழு மற்றும் காவிரி ஒழுங்கு முறைக்குழு ஆகியவை அமைக்கப்பட்டுவிடும். 

இந்நிலையில் கடந்த 10.12.2012 அன்று சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவிட்டது. அதில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு டிசம்பர் இறுதிக்குள் வெளியிடப்படவேண்டும் என்ற காவிரி கண்காணிப்புக்குழுவின் முடிவுகளை சுப்ரீம் கோர்ட் பதிவு செய்துகொண்டதாக அறிவித்தது. எனவே இதுபோன்ற சூழ்நிலையில் நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை அரசிதழில் விரைவாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் காவிரி மேலாண்மைக்குழுவையும் அமைக்கவேண்டும். அப்போது தான் தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க முடியும். இந்த விஷயத்தில் தங்கள் சாதமான பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு முதல்வர் அந்த கடிதத்தில் குறிபிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்