முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20: யுவராஜ் அதிரடியில் இந்தியா வெற்றி

சனிக்கிழமை, 22 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புணே, டிச.22 - இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இருபது ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 35 பந்துகளில் 56 ரன்களை எடுத்து அணியின் ரன் உயர்வுக்கு உதவினார்.  பின்னர் பேட் செய்த இந்திய அணி 17.5  ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.  மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

பின்னர் பேட் செய்யத் தொடங்கிய இங்கிலாந்து அணியில், மைக்கேல் லம்ப் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 21 ஆக உயர்ந்த போது 1 ரன்கள் எடுத்திருந்த லம்ப் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.  அவரைத் தொடர்ந்து லுக்ரைட்டுடன் ஜோடி சேர்ந்தார். ஹேல்ஸ். இந்த ஜோடியினர் இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் அந்த அணி 5.5 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது. இவ்வாறு போகும் பட்சத்தில் அந்த அணி 180 ரன்களைக் கடந்து விடும் என்ற நிலை இருந்தது. ஹேல்ஸ் அதிரடி : அதிரடியாக விளையாடிய ஹேல்ஸ் 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் அரை சதமடித்தார். இவருடன் மறுபுறம் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்டி வந்த ரைட்டை யுவராஜ் சிங் வெளியேற்றினார். அவர் 21 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார். அப்போது அணியின் ஸ்கோர்  10.1 ஓவர்களில் 89 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. யுவராஜ் சிங்கின் நேர்த்தியான சுழற்பந்து வீச்சில் அந்த அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்ததுடன் ரன் விகிதமும் குறைந்தது. ரைட்டைத் தொடர்ந்து ஹேல்ஸ் 56 ரன்களிலும் மோர்கன் 5 ரன்களிலும் யுவராஜ்  பந்து வீச்சில் நடையைக் கட்ட அணியின் ரன் உயர்வு தடுக்கப்பட்டது. இவர்களில் ஹேல்ஸை போல்டாக்கினார் யுவராஜ். பின்னர் களமிறங்கிய வீரர்களில் பட்டேல் 24 ரன்களும், ஆட்டமிழக்காமல் பட்லர் 33 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் யுவராஜ் சிங் 3 விக்கெட்டுகளையும் அசோக் திண்டா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். அதிரடி வெற்றி:   158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து பேட் செய்யத் தொடங்கிய இந்திய அணியில் ரஹானேவும், கம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி ஓரளவு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தது. அணியின்  ஸ்கோர் 42 ஆக இருந்த போது 16 ரன்கள் எடுத்திருந்த கம்பீர் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து 19 ரன்கள் எடுத்திருந்த ரஹானேவும் ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் அபாரம்: பின்னர் கோலியுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். கோலி மெதுவாக

விளையாட, யுவராஜ் தனது வழக்கமான ஆட்டத்தைக் கையாண்டார். அவரது அதிரடியில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அணியின் ஸ்கோர் 93 ஆக உயர்ந்த போது யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில்  3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரெய்னாவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் வெற்றி இலக்கை நோக்கி சீராக வெற்றி இலக்கை நோக்கி சீராக நகர்ந்தது. வெற்றிக்கு  மேலும் 10 ரன்கள் என்றிருந்த போது 26 ரன்கள் எடுத்திருந்த ரெய்னா ரன் அவுட்டானார். பின்னர் அதே ஓவரில் தோனி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். 21 பந்துகளில் 24 ரன்களில் தோனியும், ரன் ஏதுமின்றி ஜடேஜாவும் இறுதி வரை களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் பிரெஸ்னன் 2 விக்கெட்டுகளையும் மேக்கர், ரைட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் : 4 ஓவர்கள் பந்து வீசி 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 21 பந்துகளில் 38  ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்த யுவராஜ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 

1-0 என்ற முன்னிலை பெற்றது இந்திய அணி. கடைசி டி20 போட்டி வரும் 22 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்