முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும்: நிதி அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, டிச.23 - தமிழக பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு காண ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும் என ஊட்டியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க நீலகிரி பாராளுமன்ற தொகுதி கழக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் ஊட்டியில் நேற்று(22-ந் தேதி)நடைபெற்றது. குன்னூர் சாலையில் அமைந்துள்ள பிரீத்தி கிளாசிக் டவர்ஸ் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன் தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில் கழக பொருளாரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் 39-வது கூட்டமாக நீலகிரி தொகுதியில் இன்று சிறப்பாக நடக்கிறது. இதுவரை நாடாளுமன்ற தொகுதி கண்டிராத இக்கூட்டத்தை வெற்றிக்கூட்டமாக ஆக்கிக்காட்ட வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க.,நிறுவனர் எம்.ஜி.ஆர்.11 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அதனைத்தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா 12 ஆண்டுகாலம் ஆட்சி செய்து வருகிறார். தமிழகத்தில் 23 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய ஒரே கட்சி அ.தி.மு.க.,தான். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 18 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருந்த அ.தி.மு.க.,இன்று ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்டு மாபெரும் இயக்கமாக உருவாக்கித் தந்துள்ளார் முதல்வர் அம்மா. கடந்த 2011 ம் ஆண்டு மூன்றாவது முறையாக தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். ஆட்சிப்பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் நூறாண்டுகள் பேசும் அளவிற்கு சாதனைகளை செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள 1.85 கோடி குடும்ப அட்டைகளுக்கு மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசியை வழங்கி உணவு பாதுகாப்பு கொடுத்து வருகிறார். அத்துடன் ஒரு கோடியே 70 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா வேஷ்டி, சேலையையும் வழங்கி வருகிறார். 

முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் கட்டித்தரப்படும் தொகுப்பு வீடுகளுக்கு மத்திய அரசு ரூ.33 ஆயிரத்து 750 தான் தருகிறது. அத்துடன் ரூ.62 ஆயிரத்து 250 ஐ சேர்த்து ஒருவீட்டிற்கு ரூ. 1 லட்சம் வீதம் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டித்தந்து வருகிறார். ஏழைபெண்களின் திருமணத்திற்கு தாலிக்காக 4 கிராம் தங்கத்துடன் 25 ஆயிரம் ரொக்கப்பணமும், பட்டதாரி பெண்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் 50 ஆயிரம் ரூபாயும் வழங்கி ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார் தமிழக முதல்வர் அம்மா. மேலும் தமிழகத்தில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் கொடுத்து கல்வி புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். அத்துடன் பணக்காரர்கள் கையில் இருக்கும் மடிக்கணியை ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க.,ஆட்சியில் தமிழகத்தில் 3 பொறியியல் கல்லூரிகள் தான் துவக்கப்பட்டது. ஆனால் தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற 18 மாதத்தில் 6 பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. 

தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொலைநோக்குப்பார்வையோடு செய்துவருகிறார். 2011 சட்டமன்ற தேர்தலில் நம்முடன் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சில கருப்பசாமிகளை உள்ளாட்சி தேர்தலில் உதறிவிட்டு தன்னந்தனியாக நின்று தமிழகத்தில் 98 சதவீத வெற்றி பெற்று 1 லட்சம் கழக உறுப்பினர்களை பொறுப்பேற்க செய்துள்ளவர் தமிழக முதல்வர் அம்மா. அ.தி.மு.க.,ஆட்சியை எந்த எதிர்கட்சியாலும் குறை சொல்லமுடியாத அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறார். கருணாநிதி முதல்வராக இருந்த போது இலங்கை போரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது மத்திய காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்திருந்த கருணாநிதி அதை தடுத்து நிறுத்த வில்லை. இலங்கையில் 40 ஆயிரம் குழந்தைகள் சாவுக்கு காரணமானவர் கருணாநிதி. இலங்கை பிரச்சனையில் தமிழர்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியவர் கருணாநிதி. கருணாநிதி ஒரு தீய சக்தி என்று எம்.ஜி.ஆர். சொன்னார். எம்.ஜி.ஆர் கண்ட இயக்கத்தை கட்டிகாக்கும் காவலராக புரட்சித்தலைவி அம்மா இருக்கிறார். மத்திய அமைச்சரவையில் 13 ஆண்டுகாலம் அமைச்சர்களாக இருந்த தி.மு.க.,வினரால் தமிழகத்திற்கு எந்ததிட்டமும் வரவில்லை. காவேரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர்பிரச்சனைகளுக்கு தீர்வு காண தி.மு.க.,அரசு எதுவும் செய்யவில்லை. ஆகையால் தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனைக்கு தீர்வு காணும் ஒரே முதல்வர் அம்மா தான். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுகிற ஒரே தலைவராக அம்மா இருக்கிறார். அம்மாவிற்கு மிகப்பெரிய செல்வாக்கு உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பணிகளை ஆற்ற வேண்டியது நமது கடமை.

இந்திய நாடாளுமன்றத்திற்கு 20 ஆண்டுகளாக நல்ல பிரதமர் இல்லை. இந்திய நாடு வல்லரசாகும் நிலை இருக்கிறது. பா.ஜ.க.,மூத்த தலைவர் அத்வானியே சொல்லிவிட்டார். வரும் பாராளுமான்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க.,ஆட்சிக்கு வராது. மூன்றாவதாக ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளது என்று. எல்லா அறிவு, ஆற்றலுடன் திட்டங்களை எடுத்துச் செல்லும் பாங்கு, திறமையான ஆளுமை திறன் உள்ளதால், இந்தியாவை ஆளும் தகுதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உண்டு என்று கூறுகின்றனர். எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அம்மா நிறுத்தும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், பாரதப்பிரதமராக அம்மாவை நியமிக்கும் வகையில் வாக்குகளை சேகரித்து 40 தொகுதிகளில் வெற்றி பெற்று அம்மாவை பாரதப் பிரதமராக்கினால் தமிழத்தின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.த்து வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வியாபாரியிடம் வாய்ப்பை இழந்து விட்டோம். அதில் உள்ள குறைகளை கண்டறிந்து தற்போது கழக பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவிற்கு நாளுக்கு நாள் மதிப்பு அதிகரித்து வருகிறது. அதனை வாக்குகளாக மாற்றும் சக்தி படைக்க வேண்டும். நமக்கு மதிப்பு உருவாக்கி கொடுத்த தலைவிக்கு நன்று உணர்வோடு உழைக்க வேண்டும். அம்மா அடையாளம் காட்டுகிற வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் அம்மா படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். தற்போது மின்சார பற்றாக்குறைதான் உள்ளது. அதற்கு நிரந்தர  தீர்வு காணும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் முதல் மின்வெட்டு நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டு 2013 ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத மாநிலம் என்ற நிலை உருவாகும். வரும் பாராளுமன்ற தேர்தலில் தீய சக்தி கருணாநிதி யாருடனும் கூட்டணி வைத்தாலும், தமிழக அரசியலிலிருந்து கருணாநிதியை துரத்தியடிக்க வேண்டும். தமிழக மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க, ஒட்டுமொத்த இந்தியாவை வல்லரசாக மாற்ற தமிழக முதல்வர் அம்மாவை பிரதமராக்கியே திருவேன் என்று சபதம் மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை இப்போதே தொடங்க வேண்டும் என்றார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி பேசுகையில், கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் 2 தொகுதிகளை இழந்து விட்டோம். அதனைப் பெற வேண்டும். மாவட்டத்திலுள்ள 618 பூத்களில் கிளைச்செயலாளர்கள் மக்களைச் சந்திக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வாரம் ஒருமுறை வார்டுகளுக்குச்சென்று மக்களைச் சந்தித்து பணியாற்ற வேண்டும். இளைஞர்களை கட்சியில் இணைக்கப்பாடுபட வேண்டும். இந்தியாவில் காங்கிரசும், பா.ஜ.க.வும் செல்வாக்கை இழந்து விட்டன. அடுத்து நாட்டை ஆளும் சிறந்த தலைவர் யார் என்று பார்க்கும் போது அது புரட்சித்தலைவி அம்மாவுக்குத்தான் உள்ளது. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவர் அம்மா தான் வருவார். நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று அம்மாவின் காலடியில் வெற்றிக்கனியை சமர்பிக்க வேண்டும் என்றார்.

வீட்டுவசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசுகையில், நமது இயக்கம் ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம். எல்லோரும் பாராட்டும் இயக்கமாக இருக்கும் இந்த இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் தண்டிப்பார் அம்மா. ஏழை-எளிய பாட்டாளி மக்களுக்காக வாழும் ஒரே தலைவி அம்மா. தமிழர்களை காக்கும் ஒரே தலைவி புரட்சித்தலைவி. ஆகையால் வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் சிறப்பாக செயல்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் 18 ஆயிரம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அம்மா காண்பிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்து, தற்போதைய நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ராசாவை ஓட ஓட விரட்ட வேண்டும். அத்துடன் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கொள்ளையடித்து ஒரு வருடகாலம் சிறையில் இருந்த ராசாவிற்கு மீண்டும் வாக்களிக்க மாட்டோம் என்ற சபதமேற்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கோவை மாநகர மேயர் செ.ம.வேலுசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஏ.கே.செல்வராஜ், நீலகிரி மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் புத்திசந்திரன், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ், அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் எ.எ.கருப்பசாமி, முன்னாள் அமைச்சர் அ.மில்லர் ஆகியோர் வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தமிழக முதல்வர் அம்மாவை பாரதப்பிரதமராக அரியணையில் ஏற்ற அயராது பாடுபட வேண்டும் என பேசினர்.

முன்னதாக நீலகிரி மாவட்ட அவைத்தலைவர் தேனாடு லட்சுமணன் வரவேற்று பேசினார். முடிவில் ஊட்டி நகர கழக செயலாளர் என்.ராஜாமுகமது நன்றி கூறினார்.

கூட்டத்தில் ஏ.டி.பி.,மாநில செயலாளர் ஜெயராமன், கழக இணைச்செயலாளர் பாரதி துட்டன், துணை செயலாளர் துரை, விவசாய பிரிவு மாநில துணைச் செயலாளர் பாரதியார், சார்பு அமைப்பு நிர்வாகிகள் சம்பத்(எம்.ஜி.ஆர்.மன்றம்), பால நந்தகுமார்(ஜெ.பேரவை), ஹேம்சந்த்(இளைஞரணி), சரவணகுமார்(மாணவரணி),ராஜகோபால்(தொழிற்சங்கம்) வினோத்(இளைஞர் பாசறை), நகர செயலாளர்கள் சத்தார்(குன்னூர்) ராஜா(நெல்லியாளம்), ராஜாதங்கவேலு(கூடலூர்), ஒன்றிய செயலாளர்கள் குமார்(கடநாடு), மோகன்ராஜ்(குன்னூர்), பத்மநாபன்(கூடலூர்), ஸ்டீபன்(கீழ்கோத்தகிரி), உலிக்கல் சிவாஜி(மேலூர்), ஊட்டி நகர்மன்ற தலைவர் சத்தியபாமா, துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், குன்னூர் நகர்மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் எல்.மணி, மாவட்ட ஊராட்சி தலைவர் மேனகா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தி, பேரூராட்சி தலைவர்கள் மகேஸ்வரி(கேத்தி), உஷா(ஜெகதளா), சித்தன்(சோலூர்), கேத்தி பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் பெலோனி கிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்