முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி உத்தரவை அரசிதழில் வெளியிட முதல்வர் கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.23 - காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.  இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:-

காவிரி நீர் விவகார தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும், காவிரி பராமரிப்புக் கழகம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு 2012, டிசம்பர் 20-ந் தேதி நான் எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். 

மேட்டூர் நீர்தேக்கத்தின் நீர் இருப்பின் நிலைமை எச்சரிக்கை தரும் நிலையை அடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் நெருக்கடி நிலைமை நிலவுகிறது. 2012, டிசம்பர் 21-ந் தேதி நிலவரப்படி மேட்டூர் நீர்த்தேக்கத்தின் இருப்பு 8.8.டி.எம்.சி. அடி மட்டுமே. காவிரி பாசன மாவட்டங்களின் நிலைமை தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. கர்நாடகத்திடமிருந்து எங்கள் பங்கீட்டு நீரை பெறுவதற்கு நாங்கள் மிகவும் முயற்சி மேற்கொண்டோம். ஆனால் எங்கள் முயற்சிகளுக்கு எதிராக காவிரி நீர் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடும் வகையில் காவிரி நீர் முழுவதையும் கர்நாடகா பயன்படுத்திக் கொள்கிறது. இதனால் காவிரி பங்கீட்டு மாநிலங்களை அது அலட்சியப்படுத்தியுள்ளது. ஆகையினால் மேலும் காலதாமதம் இல்லாமல் காவிரி நீர் விவகார தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற எனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். 

காவிரி மேலாண்மைக் கழகம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை முறையாக உரிய இடத்தில் இடம்பெற செய்வதின் மூலம் இதுவரை அமுல்படுத்தாத 2007 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வெளியிட்ட இறுதி ஆணையை அமுல்படுத்த முடியும். இதன் மூலம் கர்நாடகா தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்ய முடியும். அதனால் நெருக்கடியான இந்த ஆண்டில் கருகியுள்ள எஞ்சி கிடக்கும் சாகுபடியை காப்பாற்ற முடியும். 

இந்த சூழ்நிலையில் 2012, டிசம்பர் 5-ந் தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட கருத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அதன்படி இறுதி உத்தரவை அறிவிக்கையாக வெளியிட வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. காவிரி கண்காணிப்பு குழுவின் 31 வது கூட்டம் 2012, டிசம்பர் 7-ந் தேதி நடைபெற்றது. அதில் இறுதி தீர்ப்பை மிக விரைவில் வெளியிட வேண்டும். 2012, டிசம்பர் மாதத்திற்கும் மேல் தாமதப்பட கூடாது என்று கூறப்பட்டது. 2012, டிசம்பர் 10-ந் தேதி இந்த முடிவு உச்சநீதிமன்றத்தில் ஆவணமாக பதிவு செய்யப்பட்டது. 

1992 ஆம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட ஆலோசனையை அடிப்படையாக கொண்டு 1991, ஜூன் 25-ந் தேதி காவிரி தீர்ப்பாயம் தன்னுடைய இடைக்கால உத்தரவை வெளியிட்டது என்ற நிகழ்வை உங்கள் கவனத்திற்கு நான் கொண்டு வர விரும்புகிறேன். 

மத்திய அரசின் ஜனாதிபதிக்கு அனுப்பிய குறிப்பில் 1991 ஆம் ஆண்டின் டிசம்பர் 10-ந் தேதி தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை குறிப்பிட்டிருந்தது. தீர்ப்பாயத்தில் அப்போது விளக்கம் கோரும் மனு நிலுவையில் இருந்தது. தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கும் சிறப்பு விடுமுறைக் கால மனுவும் நிலுவையில் இருந்தது. அதே முறையில் காவிரி நீர் விவகார தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை உடனேஅறிவிக்கையாக வெளியிடவேண்டும்.

தமிழக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நன்மையை நீங்கள் பரிசீலிப்பீர்கள் என்றும், தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை அறிவிக்கையாக வெளியிட மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தை அறிவுறுத்துவீர்கள் என்றும் நான் நம்புகிறேன். இந்த விவகாரத்தில் உங்களுடைய அவசர நடிவடிக்கைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்