முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மன்ற தீர்ப்பு அரசிதழில் விரைவில் வெளியிடப்படும்

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச. 23 -​காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு அரசிதழில் விரைவில் வெளியிடப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சத்யமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. விரைவில் அதற்கான பணி வெற்றிகரமாக முடியும். காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாத போக்கை கடைபிடித்து தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகிறது. இந்த மாதிரி தவறான பாதையில் தொடர்ந்து சென்றால் கர்நாடக அரசும், மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய உள்துறைஅமைச்சர், டெல்லி முதல்​அமைச்சர் உள்பட அனைத்து தலைவர்களும் ஒருமித்த கருத்தோடு இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்குமே நடக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்கள். இந்த மாதிரியான எண்ணம் கூட வராதபடி உச்சகட்ட தண்டனை வழங்குவதற்கு ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி.க்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றபட்டது. ஆனால் மக்களவையில் ஒரு சில கட்சிகள் மட்டும் அவை மரபு மீறி தவறாக நடந்து மோசமான சூழ்நிலை உருவாகியதால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த என்ஜினீயர் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டது, என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 300 பேரை கடல் கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர். அவர்களில் 85 சதவீதம் பேர் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களையும் விரைவில் பத்திரமாக மீட்டு வர மத்திய அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில தலைவர் ஞானதேசிகன் உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்