முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி பதவி ஏற்பு விழா: முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பு

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.24 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். இதற்காக வரும் 26-ம் தேதி சென்னையில் இருந்து ஆமதாபாத்திற்கு முதல்வர் ஜெயலலிதா செல்கிறார். குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 13-ம் தேதி 87 தொகுதிகளுக்கும்  மற்றும் இரண்டாவது கட்டமாக கடந்த 17-ம்  தேதியில் 95 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. ஓட்டெண்ணிக்கை கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 61 இடங்கள்தான் கிடைத்தது. அதிலும் காங்கிரஸ் சார்பாக 2 எம்.பி.க்கள் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் ராஜினாமா செய்ய உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி 115 இடங்களில் வெற்றிபெற்று அறுதிப்பெருமான்மையுடன் பாரதிய ஜனதா அரசு மீண்டும் வருகின்ற 26-ம் தேதி பதவி ஏற்கிறது. காங்கிரஸ் சார்பாக வெற்றிபெற்ற ஒரு எம்.எல்.ஏ. இறந்துவிட்டார். அவர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றால் அதிலும் பாரதிய ஜனதா வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. வருகின்ற 26-ம் தேதி நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் முதல்வராக நரேந்திரமோடி நான்காவது முறையாக பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்களும் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்கிறார்கள். கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் நிதீன்கட்காரி, யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், ராஜ்நாத் சிங், லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி மற்றும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அதோடுமட்டுமல்லாது பாரதிய ஜனதாவின் கூட்டணி தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். 

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா , குஜராத் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து, குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை 20.12.2012 அன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.  

இதனைத் தொடர்ந்து, அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அழைப்புக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று, 26.12.2012 அன்று அகமதாபாத் சென்று குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி தலைமையில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். குஜராத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் பேராதரவு கொடுத்தனர். அதனால்தான் மணி நகரில் போட்டியிட்ட நரேந்திர மோடி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றிபெற்றார். ஆமதாபாத் நகரில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தமிழர்கள் ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்