முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை கலெக்டர் முன் ஆஜராக ராமதாசுக்கு நோட்டீஸ்

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

திண்டிவனம், டிச.24 - கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலெக்டர் முன் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் ஒட்டப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தர்மபுரி கலவரத்தை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் சில கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். மதுரையில் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை ஆலோசனை கூட்டத்தை நடத்தி அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர், பாமக நிறுவனர் ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

இது தொடர்பாக கலெக்டர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 20-ந் தேதி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேட்டி அளித்துள்ளார். இதற்காக டாக்டர் ராமதாசை மதுரை மாவட்டத்திற்குள் நுழைவதற்கு ஏன் தடை விதிக்க கூடாது? என்று முகாந்திரம் கோரி குற்றவிசாரணை நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இதற்கு ராமதாஸ் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அனுப்பிய நோட்டீஸ் விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு வந்தது. அதனை அவர் திண்டிவனம் தாசில்தார் கோபால்சாமிக்கு அனுப்பினார். அவர் அந்த நோட்டீசுடன் திண்டிவனத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டுக்கு சென்ற போது அவர் அங்கில்லை. உறவினர்கள் மட்டுமே இருந்தனர். 

இதையடுத்து நோட்டீஸ் வானூர் தாசில்தாருக்கு அனுப்பப்பட்டது. வானூர் தாசில்தார் குமாரபாலன் மதுரை கலெக்டரின் நோட்டீசை எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு ராமதாஸ் வீடு உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார். அங்கு ராமதாஸ் இல்லாததால் கேட்டில் நோட்டீசை ஒட்டினார். அந்த நோட்டீசில், மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து குறித்து மதுரை கலெக்டர் முன் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் மதுரை கலெக்டர் அனுப்பிய நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்