முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் மாநில முதல்வராக மோடி இன்று பதவியேற்கிறார்

செவ்வாய்க்கிழமை, 25 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

அகமதாபாத், டிச. 26 - குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி இன்று 4 வது முறையாக பதவியேற்றுக் கொள்கிறார். இதையொட்டி அகமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவில் பா.ஜ.க .மூத்த தலைவர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 

குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது நினைவிருக்கலாம். இந்த தேர்தலில் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 36 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இம்மாநில முதல்வராக வீரபத்ரசிங் நேற்று காலையில் நடந்த பதவியேற்பு விழாவில் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு இமாச்சல் கவர்னர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

குஜராத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு 2 கட்டமாக நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 115 இடங்களை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தது. மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி சுமார் 86 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தொலைபேசி மூலம் தெரிவித்தார். அப்போது பதவியேற்பு விழாவிற்கு வருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று முதல்வர் ஜெயலலிதா இன்று குஜராத் மாநிலம் செல்கிறார். அங்கு அகமதாபாத் நகரில் நடக்கும் பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க அங்குள்ள தமிழர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதனிடையே இன்று நரேந்திர மோடி குஜராத் முதல்வராக நான்காவது முறையாக பதவியேற்றுக் கொள்கிறார். 

முன்னதாக நேற்று குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இம்மாநில சட்டமன்ற பா.ஜ.க. தலைவராக அதாவது முதல்வராக நரேந்திர மோடி அக்கட்சி எம்.எல்.ஏக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கூட்டத்தில் மேலிட பார்வையாளராக அருண்ஜெட்லி கலந்து கொண்டார். உள்ளூர் தலைவர்களும் கலந்து கொண்டனர். இன்று பதவியேற்கும் மோடிக்கு மாநில கவர்னர் ரகசிய காப்பு பிரமாணமும், பதவி பிரமாணமும் செய்து வைப்பார். இந்த விழாவில் பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையாநாயுடு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். 

தமிழகத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். இந்த விழா முடிந்ததும் இன்று மாலையே சென்னை திரும்பும் முதல்வர் ஜெயலலிதா நாளை 27 ம் தேதி டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெறும் தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்