இந்தியா - பாக்., அணிகள் இன்று சென்னையில் போட்டி

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, டிச.30 - ​இந்தியா​பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இன்று நடக்கிறது.இதையொட்டி சென்னையில் கிரிக்கெட் கோலாகல விழா துவங்கிவிட்டது.ஆனால் அதை மழை அச்சுறுத்திக்கொண்டுள்ளது.  5 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரு 20 ஓவர் போட்டிகளிலும், 3 ஒரு நாள் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் போட்டி தொடர் 1​1 என்ற கணக்கில் சம நிலையை அடைந்தது.

இந்த நிலையில் இரு அணிகள் மோதும் ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் நாளை சென்னையில் சேப்பாக்கம் எம்.எ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் 13 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகின்றன. இதனால் சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இதற்கு முன் கடைசியாக 1994​ம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டியில் மோதின. இதில் 12 ரன்னில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதற்கு இந்தியா நாளை சென்னையில் பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடைசியாக 2007​ம் ஆண்டு இந்தியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3​2 என்ற கணக்கில் வென்றது.

அதே போல் இந்த முறையும் தொடரை வெல்லும் ஆவலில் வீரர்கள் உள்ளனர். அதற்கு இன்று சென்னையில் தொடங்கும் முதலாவது போட்டி அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் யுவராஜ் சிங் புதிய அவதாரம் எடுத்தது போல் நேற்று முன்தினம்  20 ஓவர் போட்டியில் விளையாடினார். இன்றும் அவர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளார்.

காம்பீர், சுரேஷ் ரெய்னா போன்றோரும் நல்ல நிலையில் உள்ளனர். 20 ஓவர் போட்டியில் விளையாடாத சேவாக் இன்று ஒரு நாள் போட்டியில் இடம் பெற்றுள்ளார். அவர் காம்பீருடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடுவார். இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தால் மிகப்பெரிய ரன்னை குவிக்க முடியும்.

பாகிஸ்தான் அணியும் வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியில் தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இந்திய அணியுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் பலமாகவே உள்ளது. இதனால் அந்த அணியை வெல்வது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.

சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியாக நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. இதில் 34 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை இந்தியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. நாளை உள்ளூர் மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்பு. ஒரு நாள் போட்டிக்கான அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜாகீர் கான் நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இர்பான் பதான், உமேஷ் யாதவ், மனோஜ் திவாரி ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. பந்து வீச்சாளர்கள் ராகுல் சர்மா, ஓஜா ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் யுவராஜ்சிங், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், இசாந்த் சர்மா, ஷமி அகமது, அமித் மிஸ்ரா இடம் பெற்றுள்ளனர்.

15 வீரர்கள் கொண்ட இந்திய அணி வருமாறு:​

டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், வீராத் கோலி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, ரகானே, புவனேஷ்வர் குமார், அமித் மிஸ்ரா, ஷமி அகமது, அசோக் திண்டா.

இன்று காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்ஷன் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிக்கு தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் சேப்பாக்கம் மைதானத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பொறுப்பை 2 நாட்களுக்கு முன்பே சென்னை போலீஸ் ஏற்றுக்கொண்டது. போட்டியை காண வரும் ரசிகர்கள் கடுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். வாகனங்கள் நிறுத்தும் இடம், முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அச்சுறுத்தும் மழை:

சென்னையில் இன்று ஒரு நாள் போட்டி தொடங்க உள்ள நிலையில் மழை அச்சுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை நீடித்தது. மழை மேலும் தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டி நடக்குமா? வருண பகவான் கையில் தான் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: