முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் படப் பிரச்சினை: கமல்ஹாசன் சூடான பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.31 - தொழில் செய்வது என்னோட உரிமை, அதை யாரும் தடுக்க முடியாது. தடுப்பது சட்ட விரோதம் என்று விஸ்வரூபம் படப் பிரச்சினை பற்றி நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறினார். இதுபற்றிய விபரம் வருமாறு:-

கமல்ஹாசன் நடித்து இயக்கியிருக்கும் படம் விஸ்வரூபம். இந்த படம் டி.டி.எச். தொழில்நுட்பத்தில் திரையரங்கிற்கு வருவதற்கு முன்பு சின்னத்திரைகளில் ஒளிப்பரப்பாகிறது. இதை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் வரும் ஜனவரி 11 ஆம் தேதி விஸ்வரூபம் படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இதுபற்றி கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.டி.எச். தொழில்நுட்பத்தை நான் கண்டுபிடிக்கவில்லை. கண்டு பிடித்ததை நான் பயன்படுத்தியிருக்கிறேன். இதற்கு முன்பு வடநாட்டவர் ஒருவர் டி.டி.எச். முறையை பயன்படுத்தினார். அவர் செய்த தவறு வெளிநாட்டு எம்.ஜி. வாங்கி விட்டார். அதனால் பிரச்சினை ஆனது. நான் அப்படி செய்யவில்லை. இதனால் யாரும் பயப்பட தேவையில்லை. விவசாயம் தொடங்கிய காலத்தில் காளை மாடுகளை பயன்படுத்தி உழவு செய்தார்கள். பின் பசு மாடு, எருமை மாடுகள் பயன்படுத்தப்பட்டன. அதன் பிறகு டிராக்டர் வந்தது. இப்படி விவசாயத்தில் எவ்வளவோ மாற்றம் வந்தது. அந்த மாற்றமே தப்பு என்றால் என்ன அர்த்தம்.

திரையரங்கு வைத்திருப்பவர்களுக்கு அது சொத்து. நான் பணம் செலவு செய்து படம் எடுத்திருக்கிறேன். அந்த பணத்தை நான் எடுக்க வேண்டும். இதை தடுப்பது எந்த விதத்தில் சரி. இந்த டி.டி.எச். தொழில்நுட்பம் கசப்பு மருந்து மாதிரி கசக்கும். ஆனால் உடம்புக்கு நல்லது.நோயை போக்கும். டி.டி.எச். வந்தால் தியேட்டர்கள் மூடும் நிலை ஏற்படும் என்பது தவறு. உங்களுக்கும் இந்த முறையால் லாபம் கிடைக்கும். பயப்பட வேண்டாம். இதற்கு முன்பு மூடப்பட்ட தியேட்டர்களுக்கு என்ன காரணம் சொல்வீர்கள்? யார் படம் எடுத்தாலும் படம் நல்லாயில்லை என்றால் நம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் ரசிகர்கள். 

இங்கே தொழில் செய்யும் உரிமையை இந்த அரசாங்கம் எனக்கு கொடுத்திருக்கிறது. இதை தடுப்பது சட்டப்படி குற்றம், விரோதம். சேட்லைட் வந்தபோது ஆதரித்தேன். அதனுடைய இன்றைய வளர்ச்சி எப்படி இருக்கிறது? டி.டி.எச். தொழில்நுட்பத்தில் உருவான இந்த படத்தை 6 பிளாட்பாம் வாங்கியிருக்கிறது. திரையரங்கு உரிமையாளர்கள் சொல்வதுபோல் எந்த பாதிப்பும் வராது. இதில் கிடைக்கும் பணத்தை என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்கிறேன். வரும் பணத்தில் தியேட்டர்களை கட்டப் போகிறேன். இங்கே இழப்பதற்கு ஒன்றுமில்லை. நடப்பதற்கு தங்கப் பாதை இருக்கு. வாருங்கள் சேர்ந்து பயணிப்போம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். 

இந்த சந்திப்பின்போது இயக்குனர் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கே.ஆர்., கலைப்புலி சேகரன், தேனப்பன், திருப்பூர் சுப்பிரமணியன் என பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்