முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியை அடகுவைத்த கருணாநிதியின் பிழையை சரிசெய்வேன்

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.1 -  குடகுவிட்டுக் குதித்து வரும் காவிரியை அடகுவைத்த கருணாநிதியின் வரலாற்றுப் பிழையை சரி செய்வேன் என்று முதல்வர் ஜெயலலிதா சூளுரைத்தார். அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா  ஆற்றிய உரை வருமாறு:-

சென்னை, ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில்,  பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:-

அரசியலில் நான் அடியெடுத்து வைத்து முப்பது வருடங்களை நிறைவு செய்திருக்கும் இந்த வேளையில், அந்த முப்பது வருடங்களில் இருபத்தைந்து வருடங்கள் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்று கழகத்தை வழி நடத்தி வருகிறேன் என்பதை எண்ணிப் பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருந்தது. 

என்னுடைய அரசியல் பயணத்தில், பல்வேறு இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும், சோதனைகளையும் நான் சந்தித்த போது, எனக்கு உறுதுணையாக இருந்து  நீங்கள் காட்டி வரும் பாசத்திற்கும், பரிவிற்கும், அன்பிற்கும், எனது நன்றியைத் தெரிவித்து, இந்தத் தருணத்தில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

நான் கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று செயல்பட்டுவரும் இந்த 25 ஆண்டு காலத்தில் கழகம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் போது, உண்மையிலேயே வியப்பாகத் தான் இருக்கிறது.  ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்.  என்னை கழக கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்த போது, நான் தினந்தோறும் தலைமைக்கழகம் செல்லுவேன்.  உங்களுக்கு எல்லாம் தெரியும்.  அப்போது கழகத்தின் வங்கிக் கணக்கில் ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் கூட இல்லை.  ஆனால், இன்று நம்முடைய தலைமைக் கழகக் கணக்கில்  வைப்பு நிதி மற்றும் 118 கோடியே 56 லட்சத்து 76 ஆயிரத்து 530 ரூபாய் அளவிற்கு இருக்கிறது என்று சொன்னால், இது வளர்ச்சி இல்லை என்றால் வேறு எது தான் வளர்ச்சியாக இருக்க முடியும்? அதுமட்டுமல்ல, 1986​ஆம் ஆண்டு அப்போது  எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.  அப்போது தலைமைக் கழகத்தில் அனைத்து கழக உறுப்பினர்களுக்கும் புதிய உறுப்பினர் கார்டு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.  அந்தப் பணியில் நானும் ஈடுபட்டிருந்தேன்.  அன்றைய தினம் கழகத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 லட்சம்.  ஆனால் இன்று உண்மையாகவே கழகத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சம் ஆகும்.  இத்தயை ஒரு வளர்ச்சியை வேறு எந்த அரசியல் இயக்கமும் இந்தியாவிலேயே கண்டிருக்க முடியாது என்பதை நான் திட்டவட்டமாகச் சொல்லுவேன்.     

ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கி சீரழிக்கப்பட்ட தமிழகத்தை, தமிழக மக்களின் துணை கொண்டு மீட்டோம்.  அப்படி மீட்ட தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாய் மாற்ற வேண்டும் என்கிற முனைப்போடு இலக்கைத் தீர்மானித்துக் கொண்டு நம் பயணத்தை நாம் வெற்றிகரமாகத் தொடர்கிறோம்.  ஆனால், அதற்கு சவால் விடுக்கின்ற விதத்திலே எத்தனையோ தடைகள் நம் முன்னே எதிர் வந்து நிற்கின்றன என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

ஒரு புறம் ஐந்தாண்டு கால மைனாரிட்டி திமுக ஆட்சியால் சீரழிக்கப்பட்ட தமிழகத்தை செப்பனிடும் பணிகளை மேற்கொண்டு வருவது; மறு புறம் வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்ல சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு கடமையாற்றுவது என; எனது தலைமையிலான கழக அரசு போராடி வருகிறது.  அதே வேளையில், மத்தியில் ஆளும் கருணாநிதி முட்டுக் கொடுத்து தாங்குகின்ற மத்திய அரசு, எத்தனை வகைகளில் முட்டுக்கட்டை போடுகிறது என்பதை நீங்களும் அறிவீர்கள்.  

காவேரி, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சினை, கச்சத் தீவு விவகாரம்; தமிழகத்திற்கான அரிசி, மண்ணெண்ணெய், எரிவாயு, கூடுதல் நிதி போன்ற அனைத்து கோரிக்கைகளிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதை மக்கள் நன்கு அறிவார்கள்.  ஆனாலும், தமிழக மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுகின்ற முனைப்பில் நாம் வெகுவான வெற்றிகளைப் பெற்றிருக்கின்றோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

பேரறிஞர் அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும், என்னையும், அரசியல் உலகத்திற்கு அளித்திட்ட கலை உலகத்தைக் காத்தது உங்கள் அன்புச் சகோதரி தலைமையிலான கழக ஆட்சி தான்.  இப்படி, வெள்ளித் திரையை மீட்ட நாம், கருணாநிதியின் குடும்பக் கொள்ளையில் இருந்து தமிழக மக்களைக் காக்க அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புனரமைத்து; அதன் வழியே தமிழக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் நிறைவான சேனல்களை வழங்கி வருவதைப் போலவே; சென்னை மாநகருக்கும் வழங்குவதற்கு முயற்சிக்கும் நிலையில், தங்களது குடும்ப நிறுவனங்களின் மூலம் தங்களது ஏகோபித்த உரிமையை நிலை நிறுத்திட, மத்திய காங்கிரஸ் அரசைக் கொண்டு முட்டுக்கட்டைப் போடுவதையும்; அதனை உடைத்தெறிய உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் போராடி வருவதையும் தமிழக மக்கள் அறிவார்கள்.

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், அதனை மத்திய அரசு, மத்திய அரசிதழில் வெளியிட முன்வராத சூழ்நிலையில், ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் இதை வெளியிட, தான் தாங்கி இருக்கும் மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்தாத சூழ்நிலையில்; இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதே காவேரியில் நமக்குரிய பங்கை உறுதி செய்யும் என்பதால், நான் அது குறித்து மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.  எனினும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.  இந்நிலையில், எனது ஆணையின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.  இதன் மூலம், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இதையும் தடுக்கும் நோக்கில் மறைமுக வேலைகளை செய்து வருகிறார் கருணாநிதி.     

இருப்பினும், குடகு விட்டு குதித்து வரும் காவேரியை அடகு வைத்த கருணாநிதியின் வரலாற்றுப் பிழையை நான் நிச்சயம் சரி செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும், வாக்களித்த மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியை இம்மியும் குறையாமல் நிறைவேற்றும் விதமாக மாணவச் செல்வங்களுக்கு மடிக் கணினி; இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், ஃபேன்; வறுமையின் பிடியில் ஆட்பட்டுக் கிடக்கும் ஏழை​எளிய பாமர மக்களை மீட்டெடுக்கும் விதமாக கறவை மாடு, ஆடுகள் என பின்தங்கிக் கிடக்கும் மக்களின் பொருளாதாரத்தை, வாழ்வாதாரத்தை, மீட்டெடுக்கும் வகையிலான மீட்சி நடவடிக்கைகளாக இந்தத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

விலையில்லா அரிசி; தாலிக்கு தங்கம்; மீன்பிடி தடைக்கால உதவித் தொகை இரட்டிப்பு; முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை இரட்டிப்பு என 

ஒரு கனிவுள்ள அரசாங்கமாக, எளியோரின் பாதுகாவலராக நம் கழக அரசு திகழ்ந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமும்; தமிழ் நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாகவும்; லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி இருக்கிறோம்.  அதுவும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தைப் போல் அல்லாமல் முறையாக தகுதித் தேர்வுகளை முறைகேடுகள் இல்லாமல் வெளிப்படையாக நடத்தி, இளைஞர்களின் வாழ்வில் விளக்கேற்றி இருக்கிறோம்.  

மேலும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தமிழகத்தில் தொழில் தொடங்கிட அனைத்து வகைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரே நாளில் பிரபலமான 

12 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட புரட்சிகளையும் செய்திருக்கிறோம்.  ஆக, அடித்தட்டு மக்களுக்கு பொருளாதார உதவிகளும்; வறுமையைப் போக்கும் திட்டங்களும் ஒரு புறம் என்றால்; அதே வேளையில், பள்ளிக் கல்வித் துறைக்கு இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரு நிதியாண்டிற்கு மட்டுமே 14,553 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து கல்லாமையை நீக்குகிற அரசாக; அறிவொளியை ஏற்றி வைக்கிற அரசாக; உங்கள் அன்புச் சகோதரியின் அரசு திகழ்கிறது என்பதிலும் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்.

ஆக, கல்லாமை நீக்கி; இல்லாமை போக்கி; இவை இரண்டோடு வேலை இல்லாமையையும் அடியோடு அகற்றி; தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து வந்து இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாய் மாற்றுவதற்கு உழைத்து வரும் கழக அரசின் சாதனைகளை தமிழக மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.

அது போலவே, கருணாநிதியின் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி சீரழித்த ஆவினை, அடியோடு மீட்டுவிட்டோம்.  போக்குவரத்துத் துறையை பொறுப்போடு மீட்டிருக்கிறோம்.  அதனால் இன்று புதுப் புது பேருந்துகள் தமிழகமெங்கும் வலம் வந்து மக்களுக்கு மகிழ்வைத் தருகின்றன. 

இவ்வளவு சாதனைகளை நாம் நிகழ்த்தி இருந்தாலும், தமிழ் நாட்டு மக்களை பாதிப்படையச் செய்துள்ள பிரச்சனை மின் பற்றாக்குறை என்பதை நான் அறிவேன்.  முந்தைய மைனாரிட்டி திமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட மின் பற்றாக்குறையினை நீக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் நான் எடுத்து வருகிறேன்.  மிக விரைவில் தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை சீர் செய்யப்படும்.  எனது முந்தைய ஆட்சிக் காலத்தைப் போலவே தமிழகத்தை, மிகை மின் உற்பத்தி மாநிலமாய் விரைவில் மாற்றிக் காட்டுவேன்.  2013​ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். 

இந்தப் பிரச்சனையைப் பற்றி கழக உடன்பிறப்புகள் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, மக்கள் மத்தியில் பேசுகின்ற போது, எளிமையான ஒரு கருத்தை எளிதில் புரியக் கூடிய ஒரு கருத்தை அனைவரும் அவசியம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இன்று கடுமையான மின்பற்றாக்குறை தமிழகத்தில் நிலவுகின்றது.  இதற்கு யார் பொறுப்பு? இதற்கு யார் காரணம்? 2006​ல் முதலமைச்சர் பதவியை விட்டு நான் செல்லுகின்ற போது தமிழ் நாடு மின்சார உற்பத்தில் உபரி மாநிலமாக இருந்தது, மின் மிகை மாநிலமாக இருந்தது.  மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 2011​ஆம் ஆண்டில் மீண்டும் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது பார்த்தால் தமிழ் நாடு மின் குறை மாநிலமாக இருந்தது.  ஆகவே, இதற்கு நாம் எப்படி காரணமாக இருக்க முடியும்? என்னுடைய அரசு எப்படி காரணமாக இருக்க முடியும்? இடையில் இருந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தை ஆண்டது யார்? கருணநிதி அல்லவா, திமுக மைனாரிட்டி ஆட்சி அல்லவா? ஆகவே, இன்று நிலவும் இந்தக் கடுமையான மின்பற்றாக்குறை நிலைமைக்கு முழு பொறுப்பு, முழு காரணம் திமுக அரசு தான், அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தான் என்பதை அனைவரும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.    

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago