முக்கிய செய்திகள்

அதிமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் - ஜவாஹிருல்லாஹ்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
TNMUslim

 

தென்காசி. ஏப். 18 - தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெறும் என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஜவாஹிருல்லாஹ் தென்காசியில் பேட்டி அளித்த போது தெரிவித்துள்ளார்.

தென்காசியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமுமுக மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :-  தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை பிடிக்கும். இந்த தேர்தலை மிகவும் சிறப்பாக நடத்திய தலைமை தேர்தல் ஆணையர், மற்றும்

தமிழக தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் நன்றி தெரிவித்து கொள்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என நினைத்தவர்களுக்கு தேர்தல் கமிஷன் சரியான பாடம் புகட்டியுள்ளது. தேர்தல் கமிஷன் மிகவும் நடுநிலையோடு செயல்பட்டுள்ளது. பணம் இல்லாமல் இனி தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலையை மாற்றியுள்ளது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கையால் எங்களை போன்ற கட்சிகள் இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட முடிந்தது. எனவே  இந்த தேர்தலில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட தேர்தல் ஆணையர் பிரவீன்குமார், மற்றும் ராஜேந்திரன், அமுதா மற்றுமுள்ள அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகத்தில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் மிகவும் சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றினார்கள். அஇஅதிமுக கூட்டணியின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் முடிந்த பிறகும் கூட திமுகவினர்கள் அதிமுக கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையும் தேர்தல் கமிஷன் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளார்கள். அதற்கு காரணம் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் தான். தேர்தல் கமிஷன் வீடுவீடாக சென்று அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கியது பாராட்டுக்குரியது. கடந்த காலங்களில் முறையாக பூத் சிலிப் கிடைக்காததால் மக்கள் வாக்களிக்க வரவில்லை. காரணம் வாக்கு சாவடிக்கு சென்று தங்கள் வாக்கு எந்த பகுதியில் உள்ளது. என்று தெரியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. இதனால் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்துள்ளார்கள். திமுக ஆட்சி மீது மக்களுக்கு இருந்த கோபம், ஆத்திரம் இவைகள் தான் அதிக அளவில் வாக்களிக்க காரணம் ஆகும். தமிழகத்தில் மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இனிமேல் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று பேசினார், மறுநாள் 4 மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக 

கொலை செய்து உடல்களை கடலில் வீசியுள்ளார்கள். தமிழக மீனவர்களை தொடர்ந்து கொலை 

செய்து வரும் சிங்கள இரானுவத்தினர் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் உயிர் இழந்த மீனவர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது பற்றி பலமுறை தமுமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகள் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றுவரை எந்த பலனும் இல்லை.குறிப்பாக சிடி ஸ்கேன் வசதி செய்து கொடுக்கப்பட வில்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். மனித நேய மக்கள் கட்சி போட்டியிட்ட சேப்பாக்கம், ராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய 3 

தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டியின் போது நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கான், மாவட்ட செயலாளர் நயினார் முஹம்மது, முன்னாள் மாவட்ட செயலாளர் உஸ்மான், மாநில பேச்சாளர் மில்லத் இஸ்மாயில், மாவட்ட துணைச்செயலாளர் தென்காசி முகம்மது அலி, மாவட்ட துணைத்தலைவர் முகம்மது சரிபு, தொண்டரணி பிரமுகர் பண்பொழி செய்யது அலி, தொழிற்சங்க செயலாளர் முகம்மது அலி, விவசாய அணி சுலைமான், மற்றும் பீர்ஜாத், மகுதணன், மசூது அலி, பிரேம் அலி, சலீம், வாப்பாசேட், அசரப், மைதீன்பாபு, ஷேக் அப்துல்காதர், ராஜா, நல்லவர் சேட், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: