முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் கேரளாவில் வெளியீடு

சனிக்கிழமை, 26 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஜன. 27  - நடிகர் கமலஹாசன் நடித்துள்ள சர்ச்சைக்குரிய திரைப்படமான விஸ்வரூபம் திரைப்படம் நேற்று கேரள மாநிலத்தில் வெளியிடப்பட்டது. 

இந்தப் படத்திற்கு முஸ்லீம் சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தமிழ்நாட்டில் இப்படத்தை திரையிட 2 வார காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படம் நேற்று கேரளாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்திலும் இந்தப் படம் திரையிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஐதராபாத்தில் இந்தப் படத்தை போலீசார் திரையிட விடாமல் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். கேரளாவில் விஸ்வரூபம் திரைப்படம் 86 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் 25 சதவீத மக்கள் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் மிலாது நபி கொண்டாட்டம் காரணமாக இந்தப் படம் திரையிடப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து இம்மாநில உள்துறை அமைச்சர் கூறுகையில், 

ஐதராபாத் மற்றும் சைபராபாத் போலீஸ் கமிஷனர்கள் தன்னை அணுகி இப்படத்தை திரையிட விடாமல் தடுப்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். பிரச்சினைகள் வந்து விடக் கூடாது என்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கமலஹாசன் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நேற்று பார்வையிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதன் பிறகு இந்தப் படத்தை திரையிடுவது பற்றி வரும் 28 ம் தேதி கோர்ட் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகனான கமலஹாசன் தற்போது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், 

இந்திய நீதித்துறையில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் இப்படம் திரையிடப்படுவது இன்று வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்திருந்தது தெரிந்ததே. பேச்சுவார்த்தை மூலம் இந்த முட்டுக்கட்டையை தீர்க்க வேண்டும். அதற்கு முஸ்லீம் சமுதாயத்தினர் உதவ வேண்டும் என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். கமலஹாசன் ஒரு சாதாரண நடிகர் அல்ல. உலக மகா கலைஞன். தமிழ் சினிமாவை உலக அளவிற்கு எடுத்துச் சென்றவர். எனவே முஸ்லீம் சகோதரர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்