முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் பட தணிக்கையில் முறைகேடு: அரசு வழக்கறிஞர்

செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

nசென்னை, ஜன.30 - விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்ததில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக அரசு  குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஸ்வரூபம் படம் கடந்த 25-ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் காட்சி படத்தில் உள்ளதாக கூறிய தமிழக அரசு நடிகர் கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தது. 

கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் விஸ்வரூபம் படம் தடை செய்யப்படவில்லை. அங்கு படம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், தமிழக அரசின் தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.

 விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில்  நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் 2வது நாளாக நேற்று  காலை 11.45-க்கு விசாரணை தொடங்கியது.

அப்போது, நடிகர் கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான , வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு தரப்பு வக்கீல் வாதத்திற்கு பதிலளித்தார்.  சட்டம் ​ ஒழுங்கை காக்க வேண்டியது அரசின் கடமை என்றும் வன்முறை, அச்சுறுத்தல் மூலமாக பேச்சு, கருத்து சுதந்திரத்தை பறிக்க முடியாது என்றும்  விளக்கம் அளித்து வாதாடினார். விஸ்வரூபம் திரைப்படத்தை எச்சரிக்கை வாசகத்துடன் வெளியிட கர்நாடக அரசு அனுமதியளித்துள்ளதாகவும்,  அனைத்து இஸ்லாமியரும் தீவிரவாதி அல்ல என்ற வாசகத்துடனும், யாருடைய மனதையும் புண்படுத்துவது நோக்கமல்ல என்ற வரிகளுடனும் கர்நாடகத்தில் விஸ்வரூபத்தை வெளியிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்திய முஸ்லிம்களை பற்றி எந்த வகையிலும் படத்தில் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய வழக்கறிஞர், படத்துக்கு அரசு தடை விதித்துள்ளதால் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திரைப்பட சட்டவிதியின்படி தணிக்கை குழுவிற்கு பிறகு மாநில அரசு காட்சியை நீக்க முடியாது என்றும் கமல்ஹாசன் வழக்கறிஞர் கூறினார்.

கேரளா, ஆந்திராவில் விஸ்வரூபம் படம் வெற்றிகரமாக ஓடுகிறது என்றும் அம்மாநில இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படத்தை விரும்புகிறார்கள் என்றும் கமல்ஹாசன் வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் படத்தில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக கூறப்படவில்லை என்றும், தீவிரவாதத்தை எதிர்ப்பதாகவே காட்சிகள் உள்ளதாகவும் அவர் கூறினார். 

இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். அப்போது, விஸ்வரூபம் படம் தணிக்கை செய்யப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சட்டத்துக்கு உட்பட்டு படத்தை தணிக்கை செய்யப்படவில்லை என்றும் தணிக்கை சான்று விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் வாதிட்டார்.

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும்,  தணிக்கைத்துறை சட்டப்படி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் கூறினார். 

படத்தை பரிசீலனைக்குழு தான் பார்த்தது. தணிக்கைக்குழு அதிகாரிகள் படத்தை பார்க்கும்போது மனதை செலுத்தவில்லை. தணிக்கைக்குழு தான் சான்றிதழ் தர முடியுமே தவிர ஆய்வுக்குழு வழங்க முடியாது என்றும் அவர் கூறினார். 

மாநில அரசின் தடை குறித்து குறிப்பிடுகையில், அரசியல் அமைப்பு சட்டப்படி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் பாதுகாப்பு தருவது மாநில அரசின் கடமை என்றும், அப்படி அமைதிக்கு பாதகம் ஏற்படும் என்று வந்தவுடன் 144 தடை உத்தரவு அமல்படுத்துவதில் சட்டத்தில் இடம் உண்டு என்றும், அதன்படியே இப்படத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் அரசு அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறினார். 

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளித்து ரிலீஸ் செய்ய அனுமதித்து விட்டால் ஒரு மாநில அரசு அந்த ஆணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறினார். மேலும் ஒரு படத்தை பார்வையிட பரிசீலனைக்குழு அமைக்க தணிக்கைக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி பரிசீலனைக்குழு இப்படத்தை பார்த்தது என்றார். 

இதையடுத்து முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடினார்.  இஸ்லாமிய இனம் என்பது ஓரே இனம் தான். ஆப்கான் முஸ்லிம், நியூயார்க் முஸ்லிம் என்று தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. படத்தில் குரான் பற்றிய விமர்சனம் உள்ளது. அதை வேறு அர்த்தத்தில் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். சிறுவர்களை மனித வெடிகுண்டாக காட்டுகின்றனர் என்றார். 

அப்போது நீதிபதி கே.வெங்கட்ராமன் குறுக்கிட்டு, இந்தியாவில் இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தை ஆதரித்தது கிடையாது. தமிழகத்தில் மத நல்லிணக்கத்துடன் தான் வாழ்கின்றனர் என்றார். அப்போது பி.எஸ்.ராமன் குறுக்கிட்டு, அனைத்து முஸ்லிம்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடையாது என்றும், படத்தில் தீவிரவாதத்தை எதிர்ப்பதாகவே காட்சி உள்ளது என்றும் கூறினார்.     

இதன்பின் அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் என மாலை 6 மணி வரை விசாரணை  நீடித்தது. 

பின்னர் நீதிபதி,  இரவு 8.30-க்கு தீர்ப்பு அளிப்பதாகக் கூறினார். தீர்ப்பு இல்லாவிட்டால் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார். இதன்பின் இரவு 8.30 மணிக்கு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட தகவலின்படி இரவு 10.30 மணிக்கு முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. 

நீதிமன்றம் வழங்கவிருக்கும் இந்தத் தீர்ப்பு கமல் ரசிகர்கள் மட்டுமல்லாது, நாடெங்கும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்