தோல்வியுடன் டேவிஸ் கோப்பை டென்னிசை தொடங்கிய இந்திய வீரர்கள்

சனிக்கிழமை, 2 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஜன. - 3 - தென் கொரியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் முதல் நாளில் இரண்டு இந்திய வீரர்களும் தோல்வி அடைந்தனர். டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆசிய-ஒசியானா குரூப் 1 சுற்றில் இந்தியா- தென் கொரியா அணிகள் இடையிலான ஆட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. சோம்தேவ் தேவ்வர்மன், மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா உள்பட 11 வீரர்கள் இந்த போட்டியை புறக்கணித்து இருப்பதால், இந்திய அணி இளம் வீரர்களுடன் களம் இறங்கியது. லியாண்டர் பெயஸ் மட்டுமே இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கிறார். முதல் நாளில், இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டேவிஸ் கோப்பை போட்டியில் அறிமுகமான இந்திய வீரர்கள் 27 வயதான வி.எம்.ரஞ்சித், 22 வயதான விஜயந்த் மாலிக் இருவரும் தங்களது எதிராளிகளிடம் எளிதில் சரண் அடைந்து விட்டனர். ரஞ்சித், தென்கொரியாவின் மின் ஹயோக் ஹோவை எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய மின் ஹயோக் 6-1, 6-0, 6-1 என்ற நேர் செட்டில் ரஞ்சித்தை சுலபமாக தோற்கடித்தார். ஒரு மணி 23 நிமிடங்கள் மட்டுமே இந்த ஆட்டம் நடந்தது. விஜயந்த் மாலிக், தென்கொரியாவின் நம்பர் ஒன் வீரர் சுக் யங்க் ஜியோங்குடன் மோதினார். இதில் ஓரளவுக்கு போராட்டம் அளித்த ரஞ்சித் 4-6, 5-7, 0-3 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது இடது கால் தசைப்பிடிப்பால் பாதியில் விலகினார். ஜியோங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. லியாண்டர் பெயஸ், சானியா மிர்சா ஆகியோர் வெளியில் அமர்ந்து இளம் வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தனர். இந்த போட்டியில் இப்போது இந்திய அணி 0-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளதால் எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இன்று நடக்கும் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- புராவ் ராஜா ஜோடி தென்கொரியாவின் யோங் யு லிம்-ஜி சங் நாம் இணையை எதிர்கொள்கிறது

இதை ஷேர் செய்திடுங்கள்: