முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலமோன் தீவு அருகே நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

சிட்னி, பிப். 7 - பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமோன் தீவுகள் அருகே நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு சில மணி நேரங்கள் கழித்து வாபஸ் பெறப்பட்டது. 

ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமோன் தீவுகளில் நேற்று அதிகாலை 6.45 மணிக்கு (இந்திய நேரப்படி) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் நிலத்துக்கு அடியே 5.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதையடுத்து சாலமோன் தீவுகள், வனாது, நெளரு, பாபுவா நியூ கினியா, பிஜி, வேல்ஸ் மற்றும் டிப்யூடுனா, கிரிபாடி தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. 

மேலும் தென் பசிபிக் கடலோரம் உள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சான்டா க்ரூஸ் தீவுகளில் உள்ள லடா வார்ப் பகுதியில் 3 அடி உயரத்திற்கு கடல் அலை எழுந்துள்ளது. மேலும் 2 கிராமங்களிலும் சிறிய அளவில் சுனாமி அலைகள் எழுந்தன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 90 செ.மீ. உயரம் கொண்ட சிறிய அளவு சுனாமி சாலமோன் தீவை தாக்கியதாகவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. 

இது தவிர சான்டா க்ரூஸ் தீவிகளின் மேற்கு பகுதியை 4 அடி உயர சுனாமி பேரலைகள் தாக்கயதில் 50 வீடுகள் சேதமடைந்தன. பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மேடான இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சாலமோன் தீவுகள் பகுதியில் அவ்வப்போது மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு சாலமோன் தீவுகளில் 8.1 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சுனாமி ஏற்பட்டது. இதில் 52 பேர் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். 13 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து போயின என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்