முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல் - 5 கம்பெனி நிர்வாகிகள் கைது

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.21 - ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையால் குற்றம் சாட்டப்பட்ட 5 கம்பெனி நிர்வாகிகள் நேற்று கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக இவர்களது ஜாமீன் மனுக்களை டெல்லி கோர்ட் நிராகரித்ததை அடுத்து இவர்கள் திஹார் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். 

நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது அப்போதைய உதவியாளர்கள் ஆர்.கே. சந்தோலியா, சித்தார்த் பெகூரா மற்றும் ஸ்வான் டெலிகாம் நிறுவனர் பல்வா மற்றும் சிலரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஊழல் தொடர்பாக 80 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப்பத்திரிகை கடந்த 2ம் தேதி சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மாத இறுதிவாக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையும் புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் கனிமொழி, தயாளு அம்மாள், கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரது பெயரும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தை நேற்று முன்தினம் சென்னையில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமியும் தெரிவித்தார். 2 வது குற்றப்பத்திரிகையில் சோனியா, சிதம்பரம், கருணாநிதி ஆகியோர் பெயரும் இடம்பெறும் என்றும் அவர் கூறியிருந்தார். 

இந்த நிலையில் 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வு துறையால் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 கம்பெனி நிர்வாகிகள் நேற்று கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக கைது செய்யப்படுவதற்கு முன்பு  இவர்கள் அனைவரும் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் டெல்லி கோர்ட் அதை நிராகரித்ததை அடுத்து 5 பேரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை ஜாமீனில் விட்டால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்கள் என்று புலனாய்வுத் துறை அச்சம் தெரிவித்ததை அடுத்து இவர்களின் ஜாமீன் மனுக்கள நிராகரிக்கப்பட்டன. கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஓ.பி.ஷைனி இவர்களது ஜாமீன் மனுக்களை நிராகரித்தார். எங்களுக்கு வர்த்தக பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் உள்ளன. நாங்கள் இல்லாவிட்டால் நிர்வாகம் ஸ்தம்பித்து விடும் எனவே அடுத்த 7 நாட்களுக்கு எங்களை கைது செய்யக்கூடாது. நாங்கள் தகுந்த ஏற்பாடுகளை செய்யவேண்டும். எனவே எங்களக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று இவர்கள் கோரினர். ஆனால் நீதிபதி அதை ஏற்கவில்லை.

ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குனர் வினோத் கோயங்கா,  யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) லிமிடெட் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 3 அதிகாரிகள் ஆகியோர் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.  ஆனால் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்காததால் அவர்கள் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இருந்தாலும் இவர்கள் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்