முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1 கோடி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப். 21 - இந்த கல்வி ஆண்டிலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலும் படிக்கும் 1 கோடி மாணவ, மாணவியருக்கு சமச்சீர் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் இம்மாத இறுதியில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ​மாணவிகளின் மனதில் கல்வி ஏற்றத் தாழ்வு ஏற்படக்கூடாது என்பதற்காக சமச்சீர் கல்வி பாடத்திட்டம் கடந்த ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. 

மாநில பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஒ.எஸ்.எல்.சி. போன்ற தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களை விலக்கி விட்டு 1​ம் வகுப்பு முதல் 10​ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான பாடத்திட்டத்தை சமச்சீர் கல்வி அளிக்கிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஒரே விதமான கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. 

கடந்த ஆண்டு 1​ம் வகுப்பு மற்றும் 6​ம் வகுப்புகளில் மட்டும் சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

வருகிற கல்வி ஆண்டு முதல் 2​ம் வகுப்பு முதல் 5​ம் வகுப்பு வரையிலும் மற்றும் 7​ம் வகுப்பு முதல் 10​ம் வகுப்பு வரையிலும் சமச்சீர் கல்வி விரிவுப்படுத்தப்படுகிறது. 1 முதல் 10​ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் சமச்சீர் கல்வியின் புதிய பாடத்திட்டத்தின் கீழ் படிக்க இருக்கிறார்கள். சுமார் ஒரு கோடி மாணவ​ மாணவிகள் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் படிக்க உள்ளனர். 

தமிழ்நாட்டில் 37,000 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 45 லட்சம் மாணவ​மாணவிகள் படித்து வருகிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகளில் சுமார் 20 லட்சம் மாணவ​ மாணவிகள் படிக்கிறார்கள். 9​ம் வகுப்பில் 10 லட்சம் பேரும் 10​ம் வகுப்பில் 10 லட்சம் பேரும் கல்வி பயில்கின்றனர். 3,650 தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 1​ம் வகுப்பு முதல் 10​ம் வகுப்பு வரை சுமார் 35 லட்சம் மாணவ​ மாணவியர்கள் படிக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் படிக்கும் இவர்கள் அனைவரும் வருகிற கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி பெறுகிறார்கள். 

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், பாட வாரியத்தில் படித்து வரும் மாணவர்கள் இந்த ஆண்டில் இருந்து சமச்சீர் கல்வி திட்டத்திற்கு மாற்றப்படுகிறார்கள். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் புதிய பாடத்திட்டத்தை கற்க இருக்கும் மாணவ​ மாணவிகளுக்கு 9 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் இலவசமாகவும் தனியார் பள்ளிகளுக்கு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள் இந்த மாத இறுதியில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. 

தரமான காகிதத்தில் அழகிய வண்ணப்படங்களுடன் பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அனுபவமிக்க ஆசிரியர் குழுவால் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களும், நன்கு படிக்க கூடிய மாணவர்களும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் மூலம் அதிக மதிப்பெண் பெற இயலும். அடுத்த கல்வி ஆண்டில் 10​ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் படிக்க உள்ளனர். நகர்ப்புற மாணவர்களுக்கு போட்டியாக கிராமப்புற மாணவர்களும் இனி அதிக மதிப்பெண் பெற இது வழி வகுக்கும் என்று கல்வி அதிகாரிகள் கருதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்