முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன் - கார்த்திகா பேட்டி

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.22 - நடிகைக்கு கவர்ச்சி அவசியமானது. அதனால், நீச்சல் உடையில் நடிப்பது தப்பு அல்ல என்று நடிகை ராதாவின் மகள் கார்த்திகா கூறினார். தமிழ் படஉலகில் 1980 முதல் 90 வரை, நம்பர் 1 கதாநாயகியாக இருந்தவர் ராதா. இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். கணவர் மற்றும் மகன்-மகள்களுடன் ராதா மும்பையில் வசித்து வருகிறார். மூத்த மகள் கார்த்திகாவை, ராதா தனது வாரிசாக திரையுலகுக்கு அறிமுகம் செய்து இருக்கிறார். 

ஒரு தெலுங்கு படத்தில் நாக சைதன்யா ஜோடியாக அறிமுகமான கார்த்திகா, அதையடுத்து கோ என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில், ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். கே.வி. ஆனந்த் டைரக்டு செய்து இருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது.

இதையொட்டி ராதா தனது மகள் கார்த்திகாவை, சென்னையில் நிருபர்களக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது கார்த்திகா கூறியதாவது:-

என் அம்மாவும், பெரியம்மா அம்பிகாவும் தமிழ் படஉலகில் மிகப்பெரிய கதாநாயகிகளாக இருந்தவர்கள். இருவரும் ஜாம்பவான்கள். இரண்டு பேரும் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற இமயங்களுடன் நடித்தவர்கள். அவர்களுடன் என்னை ஒப்பிட முடியாது.

கோ படத்தை தியேட்டரில் பார்க்கும்போது என்னை ஒரு சாதாரண புதுமுகமாக நினைத்துக் கொள்ளுங்கள். ராதா-அம்பிகாவின் மகள் என்ற நினைப்போடு படம் பார்க்க வேண்டாம்.

நான், கவர்ச்சிக்கு எதிரானவள் அல்ல. ஒரு நடிகைக்கு கவர்ச்சி அவசியம். கவர்ச்சி இல்லையென்றால், சினிமாவில் நீடிக்க முடியாது. புடவை கட்டுவதில் கூட கவர்ச்சி இருக்கிறது. படத்தின் கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் தேவை என்றால் நீச்சல் உடையில் நடிப்பது தப்பு அல்ல.  அதே நேரத்தில், நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். 

இவ்வாறு கார்த்திகா கூறினார்.

அருகில் அமர்ந்திருந்த ராதா கூறியதாவது:-

நான், நூற்றைம்பது படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். அந்த அனுபவத்தில் என் மகள் கார்த்திகாவுக்கு சில அறிவுரைகளை சொல்லியிருக்கிறேன்.

எல்லோருடனும் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும். தொழிலை கடவுளாக மதிக்க வேண்டும். தொழில் சொல்லிக்கொடுத்த குருவை வணங்க வேண்டும். யாருடனும் நம்மை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. படப்பிடிப்புக்கு போனால், எப்போது ஷாட் எடுப்பார்கள் என்று யாரிடமும் விசாரிக்கக்கூடாது. மற்றவர்கள்  அறிவுரை சொன்னால், கேட்டுக்கொள்ள வேண்டும். இதெல்லாம் நான், என் மகளுக்கு சொன்ன அறிவுரைகள்.

நான் நடிக்க வரும்போது, சினிமாவை பற்றி எதுவுமே தெரியாமல் வந்தேன். ஆனால் இப்போது அப்படி அல்ல. நிறைய படித்த பெண்கள் வருகிறார்கள். சினிமாவை பற்றியும், அதன் பின்புலம் பற்றியும் நன்றாக தெரிந்து கொண்டு வருகிறார்கள்.

சொந்தமாக படம் தயாரிக்கும் ஆசை எனக்கு இல்லை. மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இல்லை. என் குழந்தைகள் மூன்று பேரையும் கவனித்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.இவ்வாறு நடிகை ராதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்