முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: சரத்குமார் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.16 - பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுளள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோலுக்கு ரூ.1.50ம், டீசலுக்கு மாதந்தோறும் 50 பைசாவும் உயர்த்தி வருவது போல் 50 பைசாவுக்கு உயர்த்தியிருக்கிறது.

மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் குறித்து கவலைப்படும் அளவிற்கு பொதுமக்கள் மீது சுமத்தப்படும் சுமை குறித்து இம்மியளவும் கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் எத்தகைய பாதிப்பிற்கு ஆளாவார்கள் என்ற சிந்தனை கூட இல்லாமல் மிகச்சாதாரணமாக போகிற போக்கில் விலையேற்றத்தை அறிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

டீசல் விலை உயர்வை தாக்குப்பிடிக்க முடியாமல் மாநில அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், குறிப்பாக அரசு போக்குவவத்துத்துறை போன்ற துறைகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை எப்படி சமாளிப்பது? ஏற்கனவே போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தைக் குறைத்திட தனியார்  பெட்ரோல் வினியோக சில்லரை விற்பனை நிலையங்களில் டீசல் பிடித்து வருகின்றன. டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து கொண்டே வருகின்றன.

மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியாலும் வருவாய் இழப்பிற்கு ஆளாகின்றதே தவிர, அந்நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கவில்லை. ஆனால் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு இது வரை 3 ஆண்டுகளில் 17 முறை பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியதால், அத்தனை சுமையும் அப்பாவி பொதுமக்கள் மீது தானே சுமத்தப்படுகிறது. மத்திய அரசு ஊழலில் சிக்கித்தவிக்கும் நிலையில் நிர்வாகத்தை சீராக்கி வருவாயை பெருக்கி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதை விட்டு, விட்டு ஒவ்வொருமுறையும் பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்திக்கொண்டே போனால், மக்களின் நிலை தான் என்ன? மக்கள் எவ்வளவு துயரத்தைத்தான் தாங்கமுடியும். எனவே உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை அறவே நீக்கிவிட்டு, மாதந்தோறும் உயர்த்தி வரும் டீசல் விலை உயர்வையும் கைவிடவேண்டும் என்று மசத்துவ மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!