முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு ராதிகா செல்வியிடம் விசாரணை

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

நெல்லை ஏப்- 23 - நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடி அருணா நர்சிங் கல்லூரியில் சமீபத்தில் நடந்த தி.மு.க.பிரமுகர் கொலைவழக்கில் தேவைபட்டால் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியிடம் விசாரணை நடத்தப்படும் என்று நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திரபிதரி  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், கொள்ளையர்களை பிடிக்கவும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இத்தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திசையன்விளை அருகேயுள்ள மணலிவிளையை சேர்ந்த ஜெபமணிசாமுவேல் என்பவரது மகன் எசேக்கியல்(24) என்பவருக்கு தொடர் கொள்ளை சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திசையன்விளை பகுதியில் ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு அந்தவீடுகளில் கன்னம் வைத்து வீடுகளில் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்துள்ளார். இந்த தொடர் கொள்ளையில் அவரது தந்தை ஜெபமணி சாமுவேலுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரையும் போலீசார் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 212 கிராம் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி நகைகள் மீட்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3லட்சத்து 21 ஆயிரம் ஆகும் என்று தெரிவித்தார். மேலும் தேர்தல் வீதிமுறை மீறல் தொடர்பாக 126 வழக்குகள் மாவட்டம் முழுவதும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சீகம்பட்டியில் என்ஜினியர் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள சீவலார்குளத்தில் உள்ள அமைச்சர் பூங்கோதை குடும்பத்தினருக்கு சொந்தமான ஆலடி அருணா நர்சிங் கல்லூரியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் உதவியாளர் பாபுராஜ் கொலை வழக்கு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பாபுராஜ் கொலை வழக்கில் இதுவரை 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்