முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை இனப் படுகொலை: ஐ.நா.வில் பரபரப்பான வீடியோ!

புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

ஜெனீவா, பிப். 28  - ஈ்ழத்தில் தமிழினப் படுகொலையை மகா குரூரமாக அரங்கேற்றிய சிங்கள ராணுவத்தின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தும் வகையில் மேலும் ஒரு வீடியோ ஐநாவில் வெளியிடப்பட்டது. இலங்கை இறுதிக்கட்ட போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் 2009 லிருந்து படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. சேனல் 4 தொலைக்காட்சியின் பங்கு இதில் மிகப் பெரியது. இதன் அடிப்படையில் இலங்கை அரசு மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் போர்க்குற்ற மீறல் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இந்தியாவின் ஆதரவோடு அது நிறைவேற்றப்பட்டது நினைவிருக்கலாம்.

சமீபத்தில் சேனல்-4 தொலைக்காட்சி இலங்கையின் இனப்படுகொலையை விளக்கும் இரண்டாவது ஆவணப்படத்தை வெளியிட்டது. அதில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மகன் 12 வயது பாலச்சந்திரன் ஆகியோர் இலங்கை ராணுவத்தால் முகாமில் பிடித்து கொல்லப்பட்ட தகவல் வெளியானது. மேலும் தமிழர்கள் படுகொலை காட்சிகளும் சித்ரவதைப்படும் காட்சிகளும் இடம் பெற்றன. இவை உலக நாடுகளை உறைய வைத்துவிட்டன. மீண்டும் இலங்கை அரசுக்கு எதிராக உலகம நாடுகள் பல குரல் கொடுக்க ஆரம்பித்துள்ன. இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக மேலும் ஒரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தையும் அமெரிக்காவே கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக மேலும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு முன் 2 வீடியோ காட்சிகளையும் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ காட்சிகளை வெளியிட்டிருப்பது சேனல் 4 அல்ல. பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இதையும் தயாரித்துள்ளது. தி லாஸ்ட் பேஸ் (இறுதிக் கட்டம்) என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், தமிழர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும் சிங்கள ராணுவத்தின் சித்ரவதையால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் தப்பிய தமிழர்களின் வாக்கு மூலங்களும் இடம் பெற்றுள்ளன.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் புதிய வீடியோ காட்சிகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் அதிகாரிகளுக்கு போட்டு காண்பிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாக்குமூலங்கள் தமிழில் இருப்பதால் அவற்றுக்கு ஆங்கிலத்தில் சப்- டைட்டில் போடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை நடந்த மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதர் நவி பிள்ளை ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் இலங்கை போர்க்குற்ற மீறல்கள் என்ற தலைப்பில் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தன.

ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இது போன்ற அபாயகரமான குற்றங்களில் இருந்து நீதி கிடைக்க வேண்டும் என்று அறிக்கையில் நவி பிள்ளை குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதற்கிடையே சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை ஒன்றை லண்டனில் நேற்று வெளியிட்டது. மனித உரிமை அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குனர் பிராட் ஆடம்ஸ் இதை வெளியிட்டுள்ளார். 141 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் 2006-ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டு வரை இலங்கை ராணுவம் மற்றும் போலீசாரால் பாதிக் கப்பட்ட 75 பேரின் வாக்கு மூலங்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் இலங்கையில் அதிகாரபூர்வ மற்றும் ரகசிய விசாரணை முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள். அங்கு இவர்கள் ராணுவத்திடம் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து இருக்கிறார்கள்.

ராணுவம் மற்றும் போலீசாரால் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள். தாங்கள் பட்ட இன்னல்களை அவர்கள் வாக்குமூலமாக தெரிவித்து இருக்கிறார்கள். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் இலங்கை ராணுவம் கொடுமைப்படுத்தி உள்ளது. வீடுகளில் இருக்கும் ஆண்கள், பெண்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறி கடத்திச் சென்று முகாம்களில் வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதை நிரூபிக்க அவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சரி பார்த்து உறுதி செய்து இருக்கிறோம் என்றும் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வீடியோ, சர்வதேசத்தின் கோபப் பார்வையை இலங்கை அரசு மற்றும் ராஜபக்சே சகோதரர்கள் மீது திருப்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்