முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஷாரப்பின் மனைவி கோரிக்கையை பாகிஸ்தான் கோர்ட் நிராகரித்தது

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், மார்ச். - 4 - தனது கணவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதை எதிர்த்தும், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்தும் பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பின் துணைவியார் தாக்கல் செய்த மனுவை பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று நிராகரித்து உத்தரவிட்டது. தேடப்படும் குற்றவாளியாக முஷாரப் அறிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது. முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்வது என்று முன்பு எடுக்கப்பட்ட முடிவையும் நீதிபதி சவுத்ரி ரஹ்மான் உறுதி செய்ததோடு முஷாரப்பின் துணைவியார் ஷெபா முஷாரப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் மற்றும் அவரது துணைவியாரின் கூட்டு வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட ஷெபா முஷாரப்பின் வருமானம் குறித்து அவரது வழக்கறிஞரால் ஆவணங்களை தாக்கல் செய்ய முடியாமல் போனதையடுத்து நீதிபதி ரஹ்மான் இவ்வாறு தீர்ப்பளித்தார். 2007 ம் ஆண்டில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவத்தில் முஷாரப்புக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நீதிமன்றம் முஷாரப் ஆஜராக சம்மன் அனுப்பியது. ஆனால் முன்னாள் அதிபர் முஷாரப் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்தே 2011 ம் ஆண்டில் அவரது பெரும்பாலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. ஆனால் இந்த சொத்துக்கெல்லாம் நான்தான் உண்மையான உரிமையாளர் என்று ஷெபா வாதாடினார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. முஷாரப்புக்கு தற்போது 69 வயதாகிறது. 2007 ம் ஆண்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ வெளிநாட்டில் இருந்து தனது தாயகம் திரும்பினார். ஆனால் அவருக்கு சரியான பாதுகாப்பு அளிக்க முஷாரப் தவறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அது மட்டுமல்ல, பெனாசிர் பூட்டோ படுகொலை சம்பந்தமான விசாரணையில் ஒத்துழைக்குமாறு அவருக்கு பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் முஷாரப் அதற்கு ஒத்துழைக்கவில்லை. மேலும் தானே நாட்டை விட்டு வெளியேறிய அவர், துபாய், லண்டன் போன்ற இடங்களில் இருந்து வருகிறார். 2009 ம் ஆண்டில் இருந்து அவர் வெளிநாடுகளில் சுற்றித் திரிகிறார். இந்த நிலையில் பாகிஸ்தானில் தேர்தல் வரவுள்ளது. இதில் பங்கெடுத்து கொள்ள முஷாரப் திட்டமிட்டுள்ளார். எனவே இந்த மாத இறுதிக்குள் நான் தாயகம் திரும்புவேன் என்று முஷாரப் பகிரங்கமாக அறிவித்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவரது துணைவியாரின் மனுவை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் நிராகரித்து விட்டது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் என்ற கட்சியை முஷாரப் துவக்கி உள்ளார். வரவிருக்கும் பொது தேர்தலில் எனது கட்சி முழுமையாக பங்கேற்கும். எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றும் முஷாரப் அறிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் நீதிமன்றமோ அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களையும் முடக்கி வைத்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்