முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச வன்முறை - மேலும் 21 பேர் சாவு

திங்கட்கிழமை, 4 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

டாக்கா, மார்ச்.5 - வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில்  21 பேர் உயிரிழந்தனர்.  கடந்த  4 நாள்களாக  நீடிக்கும் கலவரத்தில் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.  இதையடுத்து, கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு  எதிராக  வங்கதேசத்தில்  கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தின்  போது லட்சக்கணக்கானோர்  உயிரிழந்தனர்.  இந்தப் போராட்டத்தின்போது  மனித உரிமைகளை  மீறியதாக  ஜமாத் - இ - இஸ்லாமி கட்சியின்  (ஜே.ஐ.) பல்வேறு  தலைவர்கள்  மீது குற்றம் சாட்டப்பட்டது.  இது தொடர்பாக  விசாரித்து  வரும் சர்வதேச  குற்றவியல் தீர்ப்பாயம், ஜே.ஐ.  கட்சியின்  துணைத் தலைவர் டெல்வர்  ஹூசைன்  சையதிக்கு  (73) மரண தண்டனை அளித்து வியாழக்கிழமை  தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்க்கும் வகையில் ஜே.ஐ. கட்சியினர்  நாடு முழுவதும் தொடர்ந்து  வன்முறையில்  ஈடுபட்டு  வருகின்றனர்.  இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள  நிலையில் ஜே.ஐ. கட்சி 2 நாள் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.  இது போல, ஜே.ஐ. கட்சியின்  கூட்டணிக் கட்சியான காலிதா  ஜியா தலைமையிலான  தேசியவாத  கட்சியும் செவ்வாய்க்கிழமை  பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.  இந்நிலையில், நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள பல்வேறு  காவல் நிலையங்கள்  மீது ஜமாத் - இ - இஸ்லாமி கட்சியினர்  ஞாயிற்றுக்கிழமை  அதிகாலையில் துப்பாக்கி மற்றும்  நாட்டு வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்த  போக்ரா வின் ஷாஜஹான்பூர் ராணுவ முகாமிலிருந்த  ராணுவ வீரர்கள்  விரைந்து  வந்து எதிர்த் தாக்குதல்  நடத்தினர். தகவல் அறிந்த  போக்ராவின் ஷாஜஹான்பூர் ராணுவ முகாமிலிருந்த ராணுவ வீரர்கள்  விரைந்து வந்து, எதிர்த்தாக்குதல்  நடத்தினர்.  இந்த  மோதலில், 21  பேர் உயிரிழந்தனர்.  50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதவிர, ராஜ்ஷஹி நகரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் சனிக்கிழமை இரவு தீ வைத்தனர். எனினும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அப்பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் அலுவலகத்தையும் தீயிட்டு கொளுத்தினர். தென்மேற்குப் பகுதியில் உள்ள பகர் ஹத் பகுதியில்  உள்ள ஹிந்து கோவில்கள் மற்றும்  ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ள ஆளும் அவாமி லீக் கட்சிப் பிரமுகர்கள் 2 பேர் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கிடையே சுதந்திரப் போராட்டத்தின்போது,  மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட  ஜே.ஐ. கட்சியின்  மற்றொரு தலைவர்  அப்துல் காதர் மொல்லாவுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில்  வங்கதேச அரசு முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் மொல்லாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்